சென்னை விமான நிலையத்திற்கு வந்து செல்லும் சர்வதேச விமானங்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளதாக திமுக மாநிலங்களவை உறுப்பினர் பி. வில்சன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “சர்வதேச விமானங்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது குறித்து கடந்த நாடாளுமன்ற கூட்டத்தின் போது கேள்வி எழுப்பியதாகவும் அதற்கு பதிலளித்த மத்திய சிவில் விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் வி.கே. சிங், தேச நலன் கருதி சென்னைக்கு விமானங்களை இயக்க வியட்நாம் நாட்டு விமான போக்குவரத்து நிறுவனம் மறுப்பு தெரிவித்ததாக பதிலளித்தார்” என்று குறிப்பிட்டுள்ளார்.

விமான போக்குவரத்துத் துறை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள நிலையில் தேச நலன் கருதி விமானங்களை இயக்க சர்வதேச விமான போக்குவரத்துத் துறை மறுப்பு தெரிவித்திருப்பதற்கு மத்திய அரசு வெட்கி தலைகுனிய வேண்டும்.

மேலும், சென்னை விமான நிலையத்தின் தரத்தை சர்வதேச அளவுக்கு உயர்த்தாமல் சர்வதேச விமான சேவைகளின் எண்ணிக்கையை குறைத்து அதன் தரத்தை குறைப்பதன் மூலம் தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு ஓரவஞ்சனை செய்கிறது என்று குற்றம்சாட்டியுள்ளார்.