புஞ்சைபுளியம்பட்டி அருகே மோட்டார் சைக்கிள் – பஸ் நேருக்கு நேர் மோதியதில் 2 வாலிபர்கள் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கேரளா மாநிலம் மலப்புரம் பகுதியை சேர்ந்தவர் பாபு என்ற பூவாஸ். இவர் புஞ்சைபுளியம்பட்டி அருகே உள்ள புங்கம்பள்ளி பகுதியில் பேக்கரி கடை வைத்து நடத்தி வந்தார்.

இந்த கடையில் கேரளா மாநிலம் மலப்புரத்தை சேர்ந்த அப்துல் ரஹீம், ஜாபர் ஆகியோர் பணி புரிந்து வந்தனர். இவர்கள் 3 பேரும் இரவில் கடையை பூட்டி விட்டு புஞ்சை புளியம்பட்டியில் உள்ள அறைக்கு சென்று தங்குவது வழக்கம்.

நேற்று இரவு 3 பேரும் கடையை பூட்டி விட்டு புங்கம்பள்ளியில் இருந்து புஞ்சை புளியம்பட்டி செல்வதற்காக இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். இவர்கள் புங்கம் பள்ளி துணை மின்நிலையம் அருகே சென்றனர்.

அப்போது சத்தியமங்கலத்தில் இருந்து கோவைக்கு ஒரு அரசு பஸ் சென்றது. அப்போது அந்த பஸ் அவர்கள் சென்ற இரு சக்கர வாகனத்தின் மீது எதிர் பாராதவிதமாக மோதியது. இதில் 3 பேரும் தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

இதைக்கண்ட அக்கம் பக்கத்தினர் படுகாயம் அடைந்த 3 பேரையும் மீட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் ஜாபர் சத்தியமங்கலம் அரசு மருத்துவ மனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்தார்.

சத்தியமங்கலத்தில் இருந்து பூவாஸ் மேல் சிகிச்சைக்காக கோவை கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அவர் செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். அப்துல்ரஹீம் கோவையில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

விபத்து குறித்து புஞ்சை புளியம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.