2நாட்கள் முகாம்: அத்திவரதரிடம் ஆசி பெற 31-ம் தேதி காஞ்சிபுரம் வருகிறார் மோடி!

Must read

சென்னை:

காஞ்சிபுரம் அத்திவரதரை தரிசிக்க வரும் 31-ம் தேதி பிரதமர் மோடி காஞ்சிபுரம் வருகை தர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 31ந்தேதி மற்றும் ஆகஸ்டு 1ந்தேதி ஆகிய 2 நாட்கள் அவர் தனது அமைச்சரவை சகாக்களுடன் வந்து அத்திவரதரை தரிசனம் செய்கிறார்.

40ஆண்டுகளுக்கு ஒரு முறை 48 நாட்கள் பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் அத்திவரதர் தற்போது சயனக்கோலத்தில், ஆசி வழங்கி வருகிறார். இவர் ஆகஸ்டு 1ந்தேதி முதல் நின்ற கோலத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு ஆசி வழங்க உள்ளார்.

இந்த நிலையில், சயனக் கோலத்தில் காட்சி தரும் அத்திவரதரையும், நின்ற கோலத்தில் காட்சி தரும் அத்திவரதரை தரிசிப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி வரும் 31 ம் தேதி காஞ்சீபுரம் வருகிறார். 31ந்தேதி மற்றும் 1 ந்தேதி ஆகிய இரு நாட்கள் அவர் அத்திவரதரை தரசித்து ஆசி பெறுகிறார்.

31ந்தேதி தமிழகம் வரும் மோடி உடன்  உள்துறை அமைச்சர் அமித்ஷா, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரும் வருகிறார்கள். அன்றைய தினம் அத்திவரதரை தரிசித்து விட்டு மோடி ஹெலிகாப்டர் மூலம் சென்னை விமான நிலையம் வந்து, அன்று இரவு கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர்கள் தங்குகின்றனர். மறுநாள் ஆகஸ்டு 1 ம் தேதி நின்ற கோலத்தில் காட்சி தரும் அத்திவரதரை பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் தரிசிக்கின்றனர்.

மோடி வருகைக்கான ஏற்பாடுகள் குறித்து பிரதமர் அலுவலக முதன்மைச் செயலாளர் சத்ய பிரகாஷ் காஞ்சீபுரத்தில் ஆலோசனை மேற்கொண்டார்.

தினந்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் அத்திவரதரை தரிசித்து வருகின்றனர். பலமணி நேரம் காத்திருந்து பக்தர்கள் அத்திவரதரை தரிசிக்கின்றனர்.   கடந்த 28 நாட்களில் அத்திவரதரை சுமார் 41 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடுமுறை நாளான நேற்று சுமார் 3 லட்சம் பேர் தரிசித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அதிக கூட்டம் காரணமாக 33 பேர் மயக்கமடைந்தனர். அவர்களுக்கு தற்காலிக மருத்துவ முகாம்களில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

More articles

Latest article