சென்னை: பாஜகவுடன் கூட்டணியை முறித்தது 2 கோடி தொண்டர்களின் உணர்வு என கூறியதுடன், தொண்டர்கள் இல்லாமல் தலைவர்களை வைத்து கட்சி நடத்தமுடியாது என்று பாஜகவை மறைமுகமாக விமர்சித்தார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.
- கூட்டணி முறவு 2 கோடி தொண்டர்களின் விருப்பம்
- அண்ணாமலை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க நெருக்கடியா?
- தலைவர்களை வைத்து கட்சி நடத்த முடியாது
- மத்திய அமைச்சர்களை சந்தித்தால் கூட்டணி என அர்த்தமா?
- எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணிதான் நாடகம்
அதிமுக பாஜக இடையேயான கூட்டணி முறிந்துவிட்டதாக அதிமுக அதிரடியாக அறிவித்த நிலையில், நேற்று மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமனை அதிமுக எம்எல்ஏக்கள் சிலர் சந்தித்து பேசியது சலசலப்பை ஏற்படுத்தியது. அதுபோல, பாஜகவிலும், அண்ணாமலையின் நடவடிக்கை குறித்து கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இந்த நிலையில், இன்று சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் புதிய நலத்திட்ட பணிகளை தொடங்கிவைத்த பின்செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிச்சாமி, செய்தியாளர்களின் பல்வேறு கேள்விக்கு அதிரடியாக பதில் அளித்தார்.
பாஜகவுடனான கூட்டணி முறிவு குறித்த கேள்விக்கு, அதிமுகவில் உள்ள 2 கோடி தொண்டர்களின் விருப்பத்துக்கு இணங்க பாஜகவுடன் கூட்டணி முறிக்கப்பட்டதாக தெரிவித்ததுடன், கூட்டணி முறிவில் உறுதியாக உள்ளோம் என்றார்.
மேலும், பாஜகவுடன் இனி கூட்டணி இல்லை என்று தெளிவாக கூறிவிட்டேன். பாஜக கூட்டணியில் இருந்து விலகும் முடிவில் எந்த மாற்றமும் இல்லை. உறுதியாக இருக்கிறோம். அதிமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகள் இணையும் என்ற கேள்விக்கு ‘நீங்கள் பொறுத்திருந்து பாருங்கள்’ என்று எடப்பாடி பழனிசாமி பதில் அளித்தவர், வரும் மக்களவைத் தேர்தலில் அதிமுக அமைக்கும் கூட்டணி 40 தொகுதிகளிலும் மாபெரும் வெற்றிபெறும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். கடந்த மக்களவை தேர்தலில் பல தொகுதிகளில் குறைந்த வாக்கு வித்தியாசத்திலேயே அதிமுக தோல்வி அடைந்துள்ளது என்றார்.
கூட்டணி தொடர வேண்டும் என பாஜக மாநில துணைத் தலைவர் வி.பி.துரைசாமி கூறி இருக்கிறாரே என்ற கேள்விக்கு, அது அவரது சொந்த கருத்து; இதுகுறித்து அவரிடமே கேட்க வேண்டும் என்று கூறினார்.
மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை அதிமுக எம்.எல்.ஏ.க்கள் சந்தித்தது ஏன்? என்ற கேள்விக்கு பதில் கூறியவர், மத்திய அமைச்சரை, அ திமுக எம்எல்ஏக்கள் சந்தித்தது தொகுதி நலனுக்காகவே என்று கூறியவர், திமுக அமைச்சர்கள் டெல்லியில் மத்திய அமைச்சர்களை சந்தித்தால் கூட்டணி என அர்த்தமா? என எதிர் கேள்வி கேள்வி எழுப்பியதுடன்,
நிகழ்ச்சிகளுக்கு மத்திய அமைச்சர்கள் வரும்போது திமுக அமைச்சர்கள் சந்திக்கிறார்கள். அது கூட்டணி என்று அர்த்தமா?, நாங்கள் சந்தித்தால் கூட்டணி என்கிறீர்கள், திமுகவினர் சந்தித்தால் அது குறித்து கேள்வி எழுப்புவதில்லை என்றார்.
தென்னை விவசாயிகளின் பாதிப்பு குறித்து கோரிக்கை வைக்கவே நிர்மலா சீதாராமனை அதிமுக எம்.எல்.ஏ.க்கள் சந்தித்தனர் என்று செய்தியாளர்களிடம் கூறினார். சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் கடமையை செய்வதற்காகவே நிர்மலா சீதாராமனுடன் சந்தித்தனர் என்றார்.
பாஜகவுடன் கூட்டணி முறிவு என அறிவித்துள்ளது நாடகம்தானே என்று கேள்வி எழுப்பிய செய்தியாளருக்கு பதில் கூறிய எடப்பாடி, பாஜக-அதிமுக கூட்டணி முறிவு நாடகம் அல்ல; என்று கூறியயதுடன், எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணிதான் நாடகம் என எடப்பாடி விமர்சனம் செய்தார்.
காவிரி விவகாரம் குறித்த கேள்விக்கு, இந்த விவகாரத்தில் திமுக அரசு முறையாக செயல்படவில்லை என்று குற்றம் சாட்டியவர், முதல்வர் ஸ்டாலின் சோனியா காந்தியிடம் பேசி கர்நாடக அரசிடம் இருந்து நீரைப் பெற்றிருக்கவேண்டும். கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் போதுமான அளவு நீர் இருந்தும் கர்நாடகா நீர்திறக்க மறுக்கிறது என எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டார்.
திமுக அரசு 10% வாக்குறுதிகளை கூட நிறைவேற்றவில்லை. I.N.D.I.A கூட்டணி என்பதே நாடகம்தான், இன்னும் முழு வடிவம் பெறவில்லை- சேலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேட்டி
மக்களவைத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெறும் என்றவர், பாஜகவுடனான கூட்டணி முறிவு நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளோம் என்றார்.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை முதல்வர் வேட்பாளராக ஏற்ற பாஜக தலைமை நெருக்கடி கொடுத்ததா என்ற கேள்விக்கு, அண்ணாமலையை முதல்வர் வேட்பாள ராக்க பாஜக நெருக்கடி தந்ததாக கூறுவது தவறு. பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையை மாற்ற வேண்டும் என நாங்கள் கோரிக்கை வைக்கவில்லை. அண்ணா மலையை முதல்வர் வேட்பாளராக்க வேண்டும் என பாஜக தலைமை எந்த அழுத்தமும் கொடுக்கவில்லை என்று கூறியதுடன், பாஜகவினர் அதிமுகவுடன் சீட்டு ஒதுக்கீடு சம்பந்தமாகவும் எதுவும் பேசவில்லை. இத்தனை தொகுதிகள் வேண்டும் என பாஜக தேசிய தலைமை எந்த நிர்பந்தமும் கொடுக்கவில்லை. அமித்ஷாவோ, நட்டாவோ, மோடியோ அதிமுகவுக்கு எந்த அழுத்தத்தையும் தரவில்லை என்று எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்தார்.
பாஜகவுடனான கூட்டணியை முறித்தது ஏன் என்ற கேள்விக்கு, கூட்டணி முறிவு என்பது அதிமுகவின் 2 கோடி தொண்டர்களின் உணர்வு என்றவர், தமிழ்நாட்டில் நடந்த நிகழ்வுகள் அதிமுக தொண்டர்கள் மனதை காயப்படுத்திவிட்டது. தொண்டர்கள் உழைத்தால்தான் கட்சி வெற்றி பெற முடியும். தலைவர்களை வைத்து கட்சி நடத்த முடியாது வரும் மக்களவைத் தேர்தலில் அதிமுக அமைக்கும் கூட்டணி 40 இடங்களிலும் மாபெரும் வெற்றி பெறும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.