சென்னை: அயனாவரத்தில் போலீஸ் வேன் மோதிய விபத்தில் இரண்டு மாணவர்கள் பலியானார்கள்.  இதைக் கண்டித்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். ஆகவே அப் பகுதியில் பதட்டம் ஏற்பட்டது.
சென்னை அயனாவரத்தை சேர்ந்த ராம்குமார், சாலமன் ஆகியோர் 10ஆம் வகுப்பு முடித்திருக்கிறார்கள். இருவரும் சேர்ந்து அயனாவரம் ரயில்வே நிலையம் அருகே நடந்த கால்பந்து போட்டியை காண நேற்று மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர்.

ராம்குமார்..
ராம்குமார்..

 
 
சடலமாக
சடலமாக

புரசைவாக்கம் ஆண்டர்சன் சாலையில் சென்றபோது, பின்னால் வந்த போலீஸ் வேன் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.  இதனால் நிலை தடுமாறி கீழே விழுந்த ராம்குமார் மீது போலீஸ் வேன் ஏறி இறங்கியது. இதில் சம்பவ இடத்திலேயே ராம்குமார் பலியானார். படுகாயமடைந்த சாலமன் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால்  சிகிச்சை பலனின்றி அவரும் உயிரிழந்தார்.
விபத்து நடந்ததும் போலீஸ் வேனை ஓட்டி வந்த ஆயுதப்படை போலீஸ் ஏழுமலையும், அவருடன் இருந்த ஆறு காவலர்களும்  வேனை அங்கேயே விட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.
ஓட்டேரி போலீசார்தான் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சாலமனை மீட்டு சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ராம்குமார் உடலை பிரேத பரிசோதனைக்காக அதே மருத்துவமனைக்கு அனுப்பினர்.
விபத்தை ஏற்படுத்திய போலீஸ் வேன்
விபத்தை ஏற்படுத்திய போலீஸ் வேன்

விபத்து குறித்து அறிந்த ராம்குமாரின் உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் ஆண்டர்சான் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். விபத்தை ஏற்படுத்திய காவலர் ஏழுமலை குடிபோதையில் இருந்ததாகவும், அவரைக் கைது செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்கள்.
பொதுமக்களிடம் காவல்துறையினர் சமாதானப்பேச்சு நடத்தியும் கலைந்து செல்லாமல் விபத்தை ஏற்படுத்திய போலீஸ் வேனை கல் மற்றும் கட்டைகளால் தாக்கினர். லோடு ஆட்டோ, மோட்டார் சைக்கிள் மற்றும் கற்களை சாலைகளில் போட்டு மறியலிலும் ஈடுபட்டார்கள்.
ஒன்றரை மணி நேரத்துக்கும் அதிகமாக மறியல் நீடித்ததால் ஆண்டர்சன் சாலை, கொன்னூர் நெடுஞ்சாலை, கிள்ளியூர் சாலை, புரசைவாக்கம் நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நிலைமை மோசமானதை அடுத்து, மறியல் செய்தவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். இதில் 5 பெண்கள் உட்பட 20க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தார்கள்.
இதற்கிடையே, விபத்தை ஏற்படுத்திய காவலர் ஏழுமலை ஓட்டேரி காவல் நிலையத்தில் சரண் அடைந்தார். அவரை கைது செய்த  போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். போராட்டத்தில் ஈடுபட்டு பொது சொத்துக்களை சேதம் விளைவித்தாக நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையே  ராஜீவ்காந்தி மருத்துவமனையில் உயிரிழந்த மாணவன் சாலமன் உடலை வாங்க மறுத்து பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சாலமனின் மரணத்திற்கு நீதி கிடைக்கும் வரை போராட்டத்தை கைவிடப்போவதில்லை என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.