யோத்தி

யோத்தி ராமர் கோவில் மற்றும் யோகி ஆதித்யநாத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வரும் 22 ஆம் தேதி உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவிலின் குடமுழுக்கு விழா நடைபெற உள்ளது. விழாவில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விழாவில் பங்கேற்க பல்வேறு அரசியல் கட்சியினருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேச அரசு இந்த விழாவிற்கான ஏற்பாடுகளைத் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

நேற்று அயோத்தி ராமர் கோயிலை வெடிகுண்டு வைத்துத் தகர்ப்போம். உத்தரப்பிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்தியநாத் மற்றும் சிறப்புக் காவல் பிரிவான எஸ்டிஎப்-யின் ஏடிஜிபி அமிதாப் யாஷ் ஆகியோர் மீது வெடிகுண்டுகளை வீசுவோம்’ என்று மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதையொட்டி உத்திர பிரதேச காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்த விசாரணையில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது லக்னோவை சேர்ந்த தஹர் சிங் மற்றும் விபூதி காண்ட் என தெரியவந்ததையடுத்து அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மடிக்கணினி போன்றவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

காவல்துறையால் கைது செய்யப்பட்ட இருவரும் பாராமெடிக்கல் நிறுவனத்தில் வேலை செய்தது தெரியவந்தது. இவர்களில் தஹர் சிங் மின்னஞ்சல் கணக்குகளை உருவாக்கியதும், ஓம்பிரகாஷ் மிஸ்ரா மிரட்டல் செய்திகளை அனுப்பியதும் கண்டறியப்பட்டது. இது தொடர்பாக இருவரிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.