சென்னை: தீரன் சின்னமலையின் 216-ஆம் நினைவுநாளையொட்டி, அவரது திருவுருவச்சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

இந்திய விடுதலைப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் (Dheeran Chinnamalai, ஏப்ரல் 17, 1756 – ஜூலை 31, 1805) 216ம் ஆண்டு நினைவுநாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. தமிழகத்தில், பிரித்தானியக் கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியை எதிர்த்து கருப்ப சேர்வையுடன் இணைந்து போரிட்டவர்களுள் ஒருவர். கொங்கு நாட்டில் ஓடாநிலைக் கோட்டை கட்டி ஆண்டவர். சங்ககிரிக் கோட்டையில் ஆடிப்பெருக்கு நாளில் வீரமரணம் அடைந்தவர்.

தீரன் சின்னமலையின் தியாகத்தை போற்றும் வகையில், தமிழக அரசு சென்னையில் அவரது உருவச்சிலையை நிறுவியுள்ளது. ஓடாநிலை கோட்டையில் சின்னமலை நினைவு மணிமண்டபமும் அமைக்கப்பட்டுள்ளது.தீரன் சின்னமலை துாக்கிலிடப்பட்ட சங்ககிரியில், அவருக்கு நினைவு மண்டபம் கட்டப்பட்டுள்ளது.

அவரது பிறந்தநாள், நினைவு நாட்களில் பல்லாயிரக்கணக்கானோர் தீரன் சின்னமலைக்கு புகழ் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இன்று அவரது 216வது நினைவுநாளையொட்டி சென்னை கிண்டியில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள், அதிகாரிகள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.