‘2.0’ பட உதவி இயக்குநர் முரளி மனோகர், தனக்கு சம்பளம் வழங்கப்படவில்லை என்று ஃபேஸ்புக்கில் பதிவிட்டது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்துவரும் ‘2.0’ படத்தின் இறுதிகட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இப்படத்தை லைகா நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்து வருகிறது.

இப்படத்தின் டப்பிங் பணிகளை கவனித்து வருபவர் முரளி மனோகர். இவர் ‘2.0’ டப்பிங்கின் போது ரஜினி தெரிவித்த கருத்துகளை தனது பேஸ்புக் பக்கத்தில் பதிந்தார். இது பலராலும் பகிரப்பட்டது.

இந்நிலையில் தனக்கு சம்பளம் வழங்கப்படவில்லை என்று முரளி மனோகர் ஃபேஸ்புக் பதிவில் தெரிவித்துளளார். இப்பதிவும் பலராலும் பகிரப்பட்டு சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

அந்த பதிவில் முரளி மனோகர் கூறியிருப்பதாவது:

இனி காத்திருப்பதில் அர்த்தமேயில்லை. ‘2.0’ க்காக கடந்த டிசம்பரிலிருந்து டப்பிங்கின் முழுப் பொறுப்பேற்று நான், வேலை செய்து வருவது ஊடகவியலாளர்கள், தோழர்கள் அனைவருக்கும் தெரியும். டப்பிங்கின் போது ரஜினி சார் தனிப்பட்ட முறையில் என்னிடம் பேசியதும் செய்தியானது. செய்திக்காக எதையும் பரப்புவனல்ல நான்.

பொறுத்துப் பொறுத்துப் பார்த்து மிகுந்த மன வேதனையுடன் இதைப் பதிவு செய்கிறேன்.

“கர்ப்பத்தில் ஐந்து மாதக் குழந்தையைச் சுமக்கும் என் மனைவி” – “என் மகன் மருதனுக்குக் காய்ச்சல்” என எவ்வளவோ மன்றாடியும் கடந்த மாதத்திற்கான சம்பளம் இன்னும் எனக்கு மட்டும் வழங்கப் படவில்லை. இந்த மாதமும் வேலை செய்துகொண்டுதான் இருக்கிறேன். உண்மையைச் சொல்லியும், யாரிடமுமே எந்தப் பதிலுமில்லை.

இவ்வாறு முரளி மனோகர் தெரிவித்திருக்கிறார்.