ஜூலை 29: தமிழகத்துக்காக வாழப்பாடியார் தனது மத்தியஅமைச்சர் பதவியை தியாகம் செய்த தினம் இன்று….

Must read

சென்னை: காவிரி விவகாரத்தில் மத்தியஅரசால்  தமிழகம் வஞ்சிக்கப்பட்டதை எதிர்த்து, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவராக இருந்த வாழப்பாடி இராமமூர்த்தி,  தனது மத்தியஅமைச்சர் பதவியை தியாகம் செய்த தினம் ((29, ஜூலை 1991) இன்று. பொதுநோக்கத்துக்காக தனது அமைச்சர் பதவியை  தியாகம் செய்த தியாகத்தலைவர் வாழப்பாடியார்.  அவரது தியாகத்தை இன்றுவரை தமிழக மக்களும்,  டெல்டா விவசாயிகள் நினைவுகூர்ந்து போற்றி  வருகின்றனர்.

தமிழ்நாடு  காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருந்த வாழப்பாடி ராமமூர்த்தி, பிரதமர் நரசிம்மராவ் தலைமையிலான மத்திய அமைச்சரவையில், தொழிலாளர் நலத்துறை அமைச்சராக பதவி வகித்து வந்தார். அந்த காலக்கட்டத்தில், தமிழகம் கர்நாடகம் இடையே காவிரிப்பிரச்சினை விசுவரூபமாக எழுந்து, போராட்டங்களை முன்னெடுத்து வந்தது. இந்த விவகாரத்தில், அப்போதைய நரசிம்மராவ் அரசு, தமிழ்நாட்டுக்கு துரோகம் இழைக்கும் வகையில், கர்நாடக மாநில காங்கிரஸ் அரசுக்கு, ஆதரவாக செயல்பட்டு வந்தது.

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக உச்சநீதி மன்றத்தில் நடைபெற்ற  வழக்கு விசாரணையின்போது, நடுநிலை வகிக்காமல், கர்நாடக மாநிலத்துக்கு ஆதரவாகவே செயல்பட்டது. நரசிம்மராவ் அரசின்  ஒருதலைபட்சமான நடவடிக்கை, தமிழக மக்களிடையே கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தியதுடன், தமிழக அரசியல் கட்சிகளும், மத்தியஅரசை கடுமையாக விமர்சித்தனர்.

இந்த நிலையில், மத்தியஅரசின் தமிழக விரோத போக்கால் மனம் உடைந்த  தொழிலாளர் துறை அமைச்சராக  இருந்த வாழப்பாடியார், நரசிம்மராவ் அரசின் மீது அதிருப்தி கொண்டு,  மத்தியஅரசின் நடவடிக்கை நீதிக்குப் புறம்பான  செயல் என்று, பகிரங்கமாக கடிதம் எழுதி தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். ஆனால், பிரதமர் நரசிம்மராவ் அதை கண்டுகொள்ளாத நிலையில், 1991ம் ஆண்டு ஜூலை 29ந்தேதி தனது மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, தமிழகம் வந்தார்.

தமிழக மக்களுக்கு நீதி வேண்டி, தனது பதவியை துச்சமென நினைத்து, தூக்கி எறிந்த வாழப்பாடியாருக்கு தமிழக மக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்தது. குறிப்பாக டெல்டா பாசன விவசாயிகள் வாழப்பாடியைரை சந்தித்து தங்களது மகிழ்ச்சியை தெரிவித்தனர். தமிழக மக்கள் மத்தியில் வாழப்பாடியாரின் புகழ் மேலும் ஓங்கியது.

வாழப்பாடியாரின் தியாகம்  தமிழக வரலாற்றில்  பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்டுள்ளது.

காவிரி உள்ளவரை வாழப்பாடியாரின் புகழும் நிலைத்து நிற்கும்…

”கொள்கைதான் முக்கியம்” என பதவியை துறந்தவர் வாழப்பாடியார்…

 

More articles

Latest article