சென்னை: தமிழகத்தில் நடப்பாண்டில், 7.5% இடஒதுக்கீடு மூலம் மருத்துவ படிப்பில் சேர்ந்த மாணவர்களுக்கு, சேர்க்கைக்கான ஆணை வழங்கிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, தனது ஆட்சிக்காலத்தில் 1990 எம்பிபிஎஸ் இடங்கள் புதியதாக உருவாக்கப்பட்டதாக பெருமிதத்துடன் தெரிவித்தார்.
நீட் தேர்வு காரணமாக, அரசு பள்ளி மாணாக்கர்களின் மருத்துவர் கனவு நனவாக மாறிய நிலையில், தமிழகஅரசு, அரசு பள்ளி மாணவர்களுக்காக கொண்டு வந்த 7.5% உள்ஒதுக்கீடு சட்டம் தமிழக மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இந்த சட்டத்தின்மூலம் நடப்பாண்டு மருத்துவ மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நடத்தப்பட்டு வருகிறது.
தமிழகத்தில், இன்று முதல் மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கை தொடங்கிய நிலையில், முதல்கட்டமாக அரசு பள்ளி மாணவர்களுக்கு கலந்தாய்வு இன்று நடைபெற்றது.
அதைத்தொடர்ந்து, அரசின் உள்ஒதுக்கீட்டின் கீழ் மருத்துவ சேர்க்கைக்கான ஆணை வழங்கும் நிகழ்ச்சி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட முதல்வர் பழனிசாமி 18 மாணவர்களுக்கு மருத்துவ சேர்க்கைக்கான ஆணையை வழங்கியதுடன்,ஸ்டெதஸ்கோப் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களையும் முதல்வர் பழனிசாமி வழங்கினார்.
இதனால், பெரும் மகிழ்ச்சி அடைந்த மாணவர்களும் பெற்றோர்களும் கண்ணீர் மல்க முதல்வருக்கு நன்றி தெரிவித்ததோடு காலில் விழுந்து ஆசி பெற்றனர்.
அதைத்தொடர்ந்து நிகழ்ச்சியில் சிறப்புரை ஆற்றிய முதல்வர் பேசியதாவது,
அரசு பள்ளிகளில் படிக்கும் ஏழை எளிய மாணவர்களின் மருத்துவராகும் கனவு இன்று நிறைவேறி இருக்கிறது. அவர்களை நான் மனதார பாராட்டுகிறேன். இந்த நாள் எனது வாழ்வில் மகிழ்ச்சிகரமான நாள். தமிழக வரலாற்றில் இந்த நாள் பொன்னாள். அரசு பள்ளி மாணவர்களுக்கு இது ஒரு நன்னாள். நான் அரசு பள்ளியில் படித்தவன். எனக்கு மிக மனநிறைவு ஏற்படுத்தும் நாள் இது. ஒவ்வொரு ஆண்டும் இது தொடர்ந்து மகிழ்ச்சி தரும் திருநாள். அம்மாவும் நானும் நீட் தேர்வு கூடாது என பலமுறை பிரதமரை சந்தித்த போதும் கடிதம் மூலமும் வலியுறுத்தி வந்தோம். நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு வேண்டும் என்று கேட்டோம். சட்ட போராட்டம் நடத்தினோம். ஆனால் உச்சநீதிமன்ற ஆணைப்படி இன்று நீட் தேர்வு நடைபெறுகிறது.
நீட் தேர்வு வந்தபின் 3 ஆண்டுகளாக அரசு பள்ளிகளில் படித்த மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேர்வது குறைந்துள்ளது. அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்கள் திறமையானவர்களாக இருந்த போதிலும் நீட் தேர்வை எதிர்கொள்ள அவர்களுக்கு வாய்ப்பு மிக குறைவாக இருந்தது. அவர்களால் அதிக மதிப்பெண் பெற முடியவில்லை.
+2 படித்த மாணவர்கள் 8 லட்சத்து 41 ஆயிரத்து 259 பேர். இதில் 3 லட்சத்து 44 ஆயிரத்து 485 பேர் அரசு பள்ளியில் படித்த மாணவர்கள். அதாவது 41 சதவிகிதம் பேர். கடந்த ஆண்டு 6 அரசு பள்ளி மாணவர்கள் மட்டும் தான் மருத்துவ கல்லூரிகளில் சேரும் நிலை இருந்தது. இதனை மாற்ற வேண்டும் என்று நான் உறுதி கொண்டேன். எனவே அரசு பள்ளி மாணவர்களுக்காக 7.5 சதவிகித உள்ஒதுக்கீட்டை கொண்டு வந்தேன். ஏழை எளிய மாணவர்களுக்கு சமவாய்ப்பு அளிக்க அவர்களது மருத்துவ கனவு நனவாக இந்த உள்ஒதுக்கீடு சட்டத்தை கொண்டு வந்தேன்.
உங்களது குடும்பம் எப்படி அடையாளப்படுத்தப்பட்டது என்பது தெரியும். இனி உங்களது குடும்பத்தை மருத்துவ குடும்பம் என்று அழைப்பார்கள். தமிழ்நாட்டில் 26 அரசு மருத்துவ கல்லூரிகளும், 15 சுயநிதி கல்லூரிகளும் உள்ளன. அம்மா இருந்த போது 1945 மருத்துவ சீட் தான் இருந்தது. 2017–ல் இது 3 ஆயிரத்து 6 ஆக உயர்ந்தது, இன்று 3 ஆயிரத்து 50 ஆக உயர்ந்துள்ளது.
11 புதிய மருத்துவ கல்லூரிகள்
அம்மாவின் ஆட்சியில் 11 புதிய மருத்துவ கல்லூரிகள் துவங்கி இருக்கிறோம். இதன் மூலம் 1550 புதிய மருத்துவ சீட்கள் உருவாக்கப்படும். 2021–22 ஆண்டிலிருந்து புதிதாக 1550 சீட்கள் உருவாக்கப்படும். நான் முதலமைச்சராக பொறுப்பேற்ற பின் 1990 மருத்துவ சீட்கள் உருவாக்கப்பட்டு இருக்கிறது. 7.5 சதவிகித உள் ஒதுக்கீட்டின் மூலம் அரசு பள்ளி மாணவர்கள் 313 பேருக்கு எம்.பி.பி.எஸ். சீட் கிடைக்க இருக்கிறது. அதேபோன்று பி.டி.எஸ். படிப்பில் 92 இடங்கள் கிடைக்கும். மொத்தத்தில் அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு 405 இடங்கள் கிடைக்கும்.
இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு 7.5 உள் ஒதுக்கீடை கொண்டு வந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வரலாற்று சாதனை படைத்து இருக்கிறது. நமது முதலமைச்சர் வரம் தரும் சாமியாக இருக்கிறார். வாழ்வு தரும் முதலமைச்சராக, அருள் பாலிக்கும் முதலமைச்சராக திகழ்கிறார் என்று கூறினார்.