சென்னை:

மிழகத்தில் ஊரகப்பகுதிகளுக்கு உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டு, இன்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், உள்ளாட்சி பதவிகளுக்க 18,570 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு உள்ளதாக  மாநில தேர்தல்ஆணையர் பழனிசாமி தெரிவித்து உள்ளார்.

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் ஊரகப்பகுதிகளுக்கு 2 கட்டமாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று (27-12-2019) நடைபெற்று வருகிறது. அடுத்தக்கட்ட வாக்குப்பதிவு வரும் 30ந்தேதி நடைபெற உள்ளது.

இந்த நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த மாநில தேர்தல் ஆணையர் பழனிச்சாமி,   தமிழகத்தில் இன்று முதல்கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் அமைதியாக நடைபெற்று வருகிறது. முதல் கட்டமாக 24,680 வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்த தேர்தலில் 2 லட்சத்து 31 ஆயிரத்து 890 பேர் போட்டியிடுகிறார்கள். இவர்களில் 18,570 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

4 லட்சத்து 2 ஆயிரத்து 195 பணியாளர்கள் வாக்குச்சாவடிகளில் பணியில் உள்ளனர். 702 தேர்தல் நடத்தும் அலுவலர்கள் உள்ளாட்சி தேர்தல் பணியில் இருக்கிறார்கள் என்றார்.

இன்று நடைபெற்று வரும்  முதல் கட்ட தேர்தலில் 1 கோடியே 30 லட்சம் வாக்காளர்கள் ஓட்டு போட தகுதியானவர்கள் என்றும், 30-ந்தேதி நடைபெறும் 2-ம் கட்ட தேர்தலில் 1 கோடியே 28 லட்சம் பேர் வாக்களிக்க இருப்பதாகவும் தெரிவித்தவர், இன்று நடைபெறும் தேர்தலில்,. 8 ஆயிரத்து 633 வாக்குச் சாவடிகள் பதட்டமானவை என்று கண்டறியப்பட்டுள்ளது. இதில்  1709 வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது என்று கூறினார்.

30ந்தேதி நடைபெற உளள  2வது கட்ட வாக்குப்பதிவின்போது, பதற்றமாக கருதப்படும்,  1550 வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்படும் என்றும்,  2,842 ஓட்டுச்சாவடிகளில் வீடியோ எடுக்கப்பட இருப்பதாகவும் தெரிவித்தவர், வாக்குச்சாவடிகளை கண்காணிக்க  2,939 நுண் பார்வையாளர்களும், 495 பறக்கும் படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளதாகவும் கூறினார்.

மேலும், இன்றைய தேர்தலில்  60 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் இருக்கிறார்கள்.  வரும் 30-ந்தேதி நடைபெறும் தேர்தலுக்கு 61 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட இருப்பதாகவும்,  தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக 112 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 53 லட்சத்து 16 ஆயிரத்து 290 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 1492 மதுபாட்டில்கள்,  1700 புடவைகளும், 2202 குத்துவிளக்குகளும் பறக்கும் படை சோதனை யில் சிக்கியுள்ளது. இது தவிர 1850 மற்ற பரிசுப் பொருட்களும் பிடிபட்டு இருப்பதாகவும் தெரிவித்தார்.