சென்னை: இன்று நடைபெற்ற குரூப் 2, 2ஏ தேர்வில் 1,83,285 பேர் எழுதவில்லை என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தகவல் தெரிவித்து உள்ளது.

தமிழகத்தில் காலியாக உள்ள  5,529 காலிப்பணியிடங்களுக்கு 6.82 லட்சம் பெண்கள் உள்பட மொத்தம் 11.78 லட்சம் பேர் குருப் 2 தேர்வு எழுத விண்ணப்பித்து இருந்தனர். ஆண் தேர்வர்கள் 4,96,247 பேரும், பெண் தேர்வர்கள் 6,81,089 பேரும் தேர்வுக்கு விண்ணப்பித்திருந்தனர்.

இந்த தேர்வுக்காக மாநிலம் முழுவதும் 117 மையங்கள் அமைக்கப்பட்டிருந்தது. அதிகபட்சமாக சென்னையில் 7 மையங்களிலும் குறைந்தபட்சமாக நீலகிரியில் 3 மையங்களிலும் இன்று தேர்வு நடைபெற்றது. இந்த நிலையில், இன்றைய தேர்வை 1,83,285 பேர் எழுதவில்லை என டிஎன்பிஎஸ்சி தெரிவித்து உள்ளது.

இன்று பிற்பகல் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தலைவர் பாலசந்திரன்,  இன்று நடைபெற்ற குரூப் 2, 2ஏ தேர்வை 84.44% பேர் மட்டுமே எழுதியதாக தெரிவித்தார்.  குரூப் 2, 2ஏ தேர்வு எழுத 11,78,163 பேர் ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்த நிலையில், 9,94,878 பேர் ( 84.44% ) மட்டுமே தேர்வில் பங்கேற்றனர் என்றும் தேர்வுக்காக ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்தவர்களில் 1,83,285 பேர் தேர்வு எழுத வரவில்லை என்றும் கூறினார்.