சென்னை: தமிழ்நாட்டில் அட்சய திருதியையை முன்னிட்டு, நேற்று ஒரே நாளில் 18 டன் தங்கம் விற்பனையாகி உள்ளதாக தங்க நகை வியாபாரிகள் தெரிவித்து உள்ளனர்.

கடந்த இரு ஆண்டுகளாக கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக அறிவிக்கப்பட்ட பொதுமுடக்கம், கட்டுப்பாடுகள் போன்றவற்றால் கடுமையான பொருளாதார இழப்பை எதிர்கொண்ட மக்கள், தற்போதுதான் சற்று நிம்மதி பெருமூச்சு விட்டு, இயல்புவாழ்க்கைக்கு திரும்பி உள்ள நிலையில், அட்சய திருதியை முன்னிட்டு 18 லட்சம் டன் தங்கம் விற்பனையாகி உள்ளது.

அட்சய திருதியை தினத்தன்று எந்தப் பொருளையும் வாங்கலாம். ‘அட்சயா’ என்றால் எப்போதும் குறையாதது என்று பொருள். அட்ச பாத்திரம் எனப்படும் பாத்திரம் மூலம் அள்ள அள்ள குறையாத பலனை கொடுக்கும் என்பது இந்துக்களின் நம்பிக்கை. ஆனால், அவை இன்று வணிக நிறுவனங்களின் விளம்பரத்தினால், மக்களிடையே அட்சய திருதியை என்றால், தங்கம், தங்க நகைகள்தான்  பிரதானமாக வாங்கப்படுகிறது.

நேற்று அட்சய திருதியை தினம் என்பதால்,  சென்னை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் நகைகடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. வணிக நிறுவனங்களும் அதிகாலை முதலே திறந்திருந்த நிலையில், மக்களும் சாரை சாரையாக சென்று தங்களுக்கு பிடித்தமான நகைகளை வாங்கி மகிழ்ந்தனர்.

அக்சய திருதியை விற்பனை குறித்து பேசிய  நகை வியாபாரிகள் சங்கத்தலைவர் ஜெயந்திலால் ஜிலானி, கடந்த ஆண்டு அட்சய திருதியை நாளில் இருந்ததை விட தற்போது ஒரு பவுனுக்கு ரூ.2 ஆயிரத்து 424-ம், கிராமுக்கு ரூ.303-ம் விலை அதிகரித்து உள்ளது.  பெரும்பாலான  நகை கடைகள் காலை 5 மணிக்கு திறக்கப்பட்டாலும் பொதுமக்கள் காலையிலேயே கடைகளுக்கு வந்து  வழக்கமான உற்சாகத்துடன் பொதுமக்கள் நகைகளை வாங்கி சென்றனர் என தெரிவித்துள்ளார்.

மேலும்,  தமிழகத்தில் அட்சய திருதியை முன்னிட்டு  நேற்று ஒரு நாளில் சுமார் 16 டன் தங்கம் விற்பனையாகும் என்று எதிர்பார்த்த நிலையில்,  18 டன் தங்கம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதன் மதிப்பு ரூ.9 ஆயிரம் கோடி என்று தெரிவித்துள்ளார்.