வாஷிங்டன்:
மெரிக்க அதிபர் டிரம்ப் சமீபத்தில்,  வெளிநாட்டு மாணவர்களின் விசா ரத்து செய்யப்பட்டு வெளியேற்றப்படுவார்கள் என்று கூறியிருந்தார். இதற்கு அமெரிக்காவில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், அதிபரின் முடிவை எதிர்த்து,  அமெரிக்காவின் 17 மாகாணங்கள் வழக்கு தொடர்ந்துள்ளது.
கொரோனா முன்னெச்சரிக்கையாக ஆன்லைன் வழியாக பாடம் நடத்த முடிவெடுக்கும் கல்லூரிகளை சேர்ந்த, வெளிநாட்டு மாணவர்களின் விசாக்கள் ரத்து செய்யப்பட்டு நாட்டை விட்டு வெளியேற்றப்படுவார்கள் என அமெரிக்க அரசு அறிவித்துள்ளது.

கொரோனாவால் சிக்கி சின்னாப்பின்னமாகி உள்ள அமெரிக்காவில்,  இலையுதிர் காலத்தில் வகுப்புகள் மீண்டும் தொடங்கும் போது அவர்களின் பாடநெறிகள் முழுவதுமாக ஆன்லைனில் நடத்த பல்வேறு மாகாணங்கள், பல்கலைக்கழகங்கள் முடிவு செய்திருந்தன. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் அதிபர் டிரம்ப்,  ஆன்லைன் வழியாக பாடம் நடத்த முடிவெடுக்கும் கல்லூரிகளை சேர்ந்த வெளிநாட்டு மாணவர்களின் விசா ரத்து செய்யப்பட்டு, அவர்கள் நாட்டை விட்டு வெளியேற்றப்படுவார்கள் என்று கூறினார்.
இது அமெரிக்காவில் படிக்கும் லட்சக்கணக்கான வெளிநாட்டு மாணவர்களிடையே பீதியை ஏற்படுத்திய நிலையில், அதிபரின் முடிவுக்கு  பல்வேறு மாகாண அரசுகள் மட்டுமின்றி ஏராளமான பல்கலைக்கழகங்களும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இதையடுத்து, அதிபர் டிரம்பின் அறிவிப்பு  கூட்டாட்சி விதியை மீறும் செயல், தொற்றுநோய்களுக்கு மத்தியில் சர்வதேச மாணவர்களை வெளியேற்றுவதற்கான மத்திய அரசின் “கொடூரமான, திடீர் மற்றும் சட்டவிரோத நடவடிக்கை”  இது என்றும், அதிபரின் அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும் என அமெரிக்காவில் உள்ள  பதினேழு மாநிலங்களும், கொலம்பியா மாவட்டமும் டிரம்ப் நிர்வாகத்திற்கு எதிராக வழக்குத் தொடர்ந்துள்ளன.
இந்த வழக்கானது மாசசூசெட்ஸில் உள்ள அமெரிக்க மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், டிரம்பின் முடிவை அமெரிக்க மாசசூசெட்ஸ் அட்டர்னி ஜெனரல் மயூரா ஹீலி  கடுமையாக சாடியுள்ளார்.
“இந்த புத்திசாலித்தனமான விதிக்கான அடிப்படையை விளக்க டிரம்ப் நிர்வாகம் கூட முயற்சிக்கவில்லை, இது பள்ளிகளை தங்கள் சர்வதேச மாணவர்களை சேர்ப்பதற்கும் அவர்களின் வளாகங்களின் ஆரோக்கியத்தையும் பாதுகாப்பையும் பாதுகாப்பதற்கும் இடையே தேர்வு செய்ய கட்டாயப்படுத்துகிறது”  என்று கூறியுள்ளார்.
ஏற்கனவே கடந்த வாரம், அதிபர் டிரம்பின் அறிவிப்பை எதிர்த்து, பிரபலமான ஹார்வர்ட் பல்கலைக்கழகம் மற்றும் மாசசூசெட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி ஆகியவை  மற்றம் , கலிஃபோர்னியா கடந்த வாரமும் வழக்குகளை தொடர்ந்துள்ன.
இந்நிலையில்,  டிரம்ப் அரசின்  முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்து 17 மாகாண அரசுகளுடன் சேர்ந்து, 200-க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்கள் தற்போது வழக்கு தொடர்ந்துள்ளன.