மொஹட்

த்தியப் பிரதேசத்தில் பாகிஸ்தானின் கிரிக்கெட் வெற்றியைக் கொண்டாடியதாகப் போலி புகாரில் கைதான 17 இஸ்லாமியர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். 

கடந்த 2017, ஜூன் 18ஆம் தேதி லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெற்ற ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி பாகிஸ்தான் அணி கோப்பையைத் தட்டிச் சென்றது.  இந்த வெற்றியை மத்தியப் பிரதேச மாநிலம் மொஹட் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் பாகிஸ்தானுக்கு ஆதரவாக வெற்றி முழக்கங்களை எழுப்பி, இனிப்புகளை விநியோகித்ததாகவும், பட்டாசுகளைக் கொளுத்தியதாகவும் செய்திகள் வெளியாகின. இதனால் 17 இஸ்லாமியர்கள் மற்றும் 2 சிறுவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின்கீழ் தேசத்துரோகம் மற்றும் கிரிமினல் சதி செய்ததாக வழக்கு பதியப்பட்டது.

இந்த வழக்கில் காவல் துறையினரால் ஆதாரங்களைக் காட்ட முடியவில்லை. எனவே இந்த வழக்கில், உண்மையில்லை எனவும் போலியாக தயாரிக்கப்பட்டுள்ளது எனவும் விசாரணை நடத்திய நீதிமன்றம் தெரிவித்ததுடன், அவர்களையும் விடுதலை செய்துள்ளது. முஸ்லிம் ஆண்கள் மீது வைக்கப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுகள், காவல்துறையின் அழுத்தத்தினாலேயே வைக்கப்பட்டுள்ளது எனப் புகார் அளித்தவரும், அரசு வழக்கறிஞரும் தெரிவித்திருந்தனர்.

அது ஜோடிக்கப்பட்ட வழக்கு எனக்கூறி நீதிமன்றம் அவர்களை விடுதலை செய்துள்ளது. வழக்கில் கைது, சிறை, காவல்துறை தாக்குதல், தேசத்துரோகிகள் என அவதூறு என எல்லாவற்றையும் சுமந்த அவர்கள், விடுதலை ஆக 7 ஆண்டுகள் ஆகியுள்ளன. இவர்களில் ஒருவரான 2 குழந்தைகளுக்குத் தந்தை ஒருவர், 2019 ஆம் ஆண்டு தற்கொலை செய்துகொண்டார்.

சிறார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அந்த 2 சிறுவர்களும் கடந்த, 2022ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் விடுவிக்கப்பட்டாலும் தங்களுடைய கல்விக்கனவு தொலைந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டபோதிலும், அவர்களுக்கு அரசாங்கத்திடமிருந்து எந்த இழப்பீடும் கிடைக்கவில்லை.

முக்கியமாக  இச்சம்பவத்திற்குப் பிறகு இந்தியா – பாகிஸ்தான் மோதும் கிரிக்கெட் போட்டியை, தொலைக்காட்சியில் கூட ஊர் மக்கள் யாரும் பார்ப்பது இல்லை என அக்கிராமத்தின் தலைவர் கூறியுள்ளது கேட்போர் மனதை உருக்கி உள்ளது.