டெல்லி:

கோவை மேட்டுப்பாளையத்தில் வீட்டின் காம்பவுண்டு  சுவர்இடிந்து விழுந்து, 17பேர் பலியானது குறித்து நடவடிக்கை எடுக்கக் கோரி  எஸ்.சி ஆணைய சேர்மனிடம் மதுரை எம்.பி. வெங்கடேசன் மனு அளித்துள்ளார்.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால்  மேட்டுப்பாளையம் அருகில் உள்ள நடூர் கிராமத்தில் ஒரு வீட்டின் சுவர் இடித்து விழுந்தது. அந்த சுவரின் மறுபுறத்தில் சுவரை ஒட்டி வீடுகள் அமைத்து வாழ்ந்து பல குடும்பத்தினர் வாழ்ந்து வரும் நிலையில், கடும் மழை காரணமாக, அந்த சுவர் நள்ளிரவு இடிந்து விழுந்தது.

இதனால், சுவரின் மறுபுறத்தில் வசித்து வந்தவர்கள், அதனுள் சிக்கி பலியானார்கள். 17 பேர் பலியான நிலையில், இந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், ஒருசிலர், இடிந்து விழுந்த சுவர் தீண்டாமை சுவர் என பிரச்சினை கிளப்பியதால், தற்போது இந்த இயற்கை பேரிடர் விவகாரம், ஜாதிய ரீதியிலான பிரச்சினையாக உருவெடுத்து உள்ளது.

சுவர் இடிந்து விழுந்த விவகாரத்துக்கு கண்டனம் தெரிவித்து அங்கு போராட்டம் நடைபெற்றது. இதனால் காவல்துறையினருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, தடியடி நடத்தப்பட்டது.

இதுகுறித்து மதுரை மாவட்ட எம்.பி. வெங்கடேசன்,  எஸ்.சி ஆணையத்தின் சேர்மன் அவர்களை பாதிக்கப்பட்ட நடூர் கிராமத்திற்கு சென்று உடனடியாக ஆய்வு செய்ய வலியுறுத்தி மத்திய சமூக நீதி மற்றும் மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு தவார் சந்த் கெஹ்லாட் அவர்களிடம் கோரிக்கை மனுவினை அளித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டிவிட்டர் பதிவில் தெரிவித்து உள்ளார்.