சென்னை: சென்னையில் ஒரே நாளில் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி செல்போன் திருட்டில் ஈடுபட்ட கும்பலை சென்னை காவல்துறை கூண்டோடு கைது செய்துள்ளது. இதற்கு உதவியாக இருந்த சைனா பஜார் வியாபாரி நாகூர் மீரானையும் கைது செய்துள்ளனர்.

சமீப நாட்களாக சென்னையில் செல்போன் பறிப்பு அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரே நாளில் பல இடங்களில் செல்போன் பறிப்பு நடைபெற்றது.  சென்னை கேகே நகர், வடபழனி, அசோக் நகர், மாம்பலம் உள்பட நகரின் முக்கிய பகுதிகளில் கடந்த 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் தொடர் செல்போன் திருட்டு சம்பவம் நிகழ்ந்துள்ளது. மொத்தம் 17 பேர் தங்களது செல்போன்களை பறிகொடுத்ததாக காவல்துறையில் புகார் அளித்தனர்.

இது மக்களிடையே அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், செல்போன் பறிப்பு  தொடர்பாக விசாரணை நடத்தி குற்றவாளிகளை பிடிக்க தி நகர் துணை ஆணையர் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையினர், செல்போன் பறிப்பு நடைபெற்ற பகுதிகளில் உள்ள 200க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, நடவடிக்கை எடுத்தனர்.

அதனப்டி , செல்போன் திருட்டு வழக்கில் தொடர்புடைய வியாசர்பாடி, எம்கேபி நகர் பகுதிகளை சேர்ந்த அஜய், சபியுல்லா, விக்கி, கிருபா, நாகூர் மிரான் ஆகியோரை கைது செய்தனர். கைதானவர்களிடம் இருந்து 17 செல்போன்கள் மீட்கப்பட்டன. இதைத்தொடர்ந்து இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இந்த திருட்டில் மூளையாக செயல்பட்ட முக்கிய குற்றவாளியை காவல்துறையினர் அடையாளம் கண்டனர்.

சைனா பஜாரில் செல்போன் கடை நடத்தி வரும் நாகூர் மீரான், திருட்டு செல்போன்களை வாங்கி அதன் IMEI எண்களை மாற்றி புதிய செல்போன் போன்று மாற்றியமைத்து இலங்கை, வங்கதேசம் உள்பட பல்வேறு நாடுகளுக்கு குருவி மூலம் விற்பனை செய்து வருவது தெரியவந்ததது.

நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அவ்வளவு எளிதாக கண்பிடிக்க முடியாதவாறு திருடப்பட்ட செல்போன் IMEI எண்களை மாற்றி வந்தது தெரியவந்தது. அத்துடன் அந்த புதுப்பிக்கப்பட்ட செல்போன்களை விற்பனை செய்த பணத்தை பெறும் வங்கி கணக்கு ஆய்வு செய்தபோது, சையது யாமின் பாஷா என்பவரது கணக்கு என்பது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து போலீசார் மேற்கொண்ட தீவிர விசாரணையில், சையது யாமின் பாஷா மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது.

திருட்டு செல்போன்களை விற்பதால் கிடைக்கும் பணத்தை வைத்து செல்போன் மற்றும் செயின் பறிப்பில் ஈடுபடு் இளைஞர்களுக்கு போதை பொருள்களான கஞ்சா, விலை உயர்ந்த ஆடைகள் வாங்கி கொடுத்து பணத்தையும் அள்ளி கொடுத்துள்ளனர். அத்துடன் அவர்கள் தொடர்ந்து வழிப்பறியில் ஈடுவதற்கு மூளைச்சலவை செய்ததும் விசாரணையில் தெரியவந்தது.

தேடப்படும் குற்றவாளியாக இருந்து வந்த யாமின் பாஷா, மூன்று ஆண்டுகளுக்கு மேல் போலீசில் சிக்காமல் தலைமறைவாக இருந்துள்ளார். ஆனாலும் இளைஞர்கள் சிலரை தன் கட்டுப்பாட்டில் வைத்து தொடர் வழிப்பறியில் ஈடுபட்டுள்ளார்.

செல்போன் சிக்னல்கள் மூலம் யாமின் பாஷா எங்கிருக்கிறார் என்பதை கண்டுபிடிக்காமல் இருப்பதற்கு வாட்ஸ்அப் கால் மூலம் விபிஎன் தொழில்நுட்பம் மூலம் தெரியாத எண்களில் பேசி வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். அதுமட்டுமில்லாமல் இன்ஸ்ட்கிராம் மூலம் சேட் செய்தும், கால் செய்தும் எங்கு செயின் பறிப்பு சம்பவங்களை நிகழ்த்த வேண்டும் என்பதை கட்டளையிடுவதாக கைதானவர்கள் வாக்குமூலம் அளித்தனர்.

இதைத்தொடர்ந்து சையது யாமின் பாஷா பயன்படுத்து செல்போன் நெட்வொர்க்கை வைத்து அவர் இருக்கும் இடத்தை காவல்துறையினர் கண்டுபிடித்து கைது செய்துள்ளனர். இந்த வழக்கில் கைதானவர்களில் சபியுல்லா என்பவர் வழிப்பறி சம்பவத்தில் ஈடுபடுதற்காக வாகனத்தை தயார் செய்து கொடுத்து வந்துள்ளார். தொழில்நுட்பத்தை பயன்படுத்தி போலீஸுக்கே சவால் விடும் விதமாக செல்போன், செயின் பறிப்பு போன்ற குற்ற செயல்களில் ஈடுபட்டவர்கள் கூண்டோடு பிடித்த தனிப்படை போலீசாருக்கு காவல்துறை உயர் அலுவலர்கள் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.