சென்னை: தமிழ்நாட்டிற்கு மேலும்165 கம்பெனி துணை ராணுவ படை வருகிறது என்று கூறிய தமிழ்நாடு தேர்தல் ஆணையர் சாகு, ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், புதிய தமிழகம் கட்சிகளுக்கு சின்னம் ஒதுக்கப்படவில்லை என்றார்.

தமிழ்நாட்டில் ஏப்ரல் 18ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதையொட்டி வேட்புமனுத்தாக்கல் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், அரசியல் கட்சியினர் விறுவிறுப்பாக வேட்புமனுக்களை தாக்கல் செய்து பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில்,  இன்று  சென்னை  தலைமைச்செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, லோக்சபா தேர்தலையொட்டி, தமிழகத்தில் இதுவரை சி விஜில் செயலி மூலம் 11,305 புகார்கள் பெறப்பட்டுள்ளது என்றும், வாக்காளர்களிடம் இருந்து மட்டும் 17,800 புகார்கள் கட்டுப்பாட்டு அறைக்கு வந்துள்ளது. இந்த புகார்கள்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தவர், மாநிலம் முழுவதும, . 17 ஆயிரத்து 32 துப்பாக்கிகளை சம்பந்தப்பட்டவர்கள் போலீசில் சமர்ப்பித்துள்ளனர் என்றார்.

தேர்தல் பிரசாரம் மேற்கொள்ளும் வகையில், அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 453 நட்சத்திர பேச்சாளர்களுக்கு  இதுவரை அனுமதி அட்டை வழங்கப்பட்டு உள்ளது.  தேர்தல் பணியின்போது பாதுகாப்புக்காக, தமிழகத்தில் 190 கம்பெனி துணை ராணுவ படையினர் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட இருக்கிறார்கள்.  ஏற்கனவே துணை ராணுவ படைகள் வந்துள்ள நிலையில், இன்னும், 165 கம்பெனி துணை ராணுவ படையினர் வருகை தர உள்ளனர் என்றார்.

மேலும்,  ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், புதிய தமிழகம் கட்சிக்கு இன்னும் சின்னம் ஒதுக்கீடு செய்யப்படவில்லை என்றவர், தேர்தல் விழிப்புணர்வு தொடர்பாக வாக்காளர்களுக்கு வினியோகம் செய்ய கையேடு தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த மாதம் இறுதியில் இருந்து வீடு வீடாக இதை வினியோகம் செய்ய ஏற்பாடு செய்து உள்ளதாகவும் தெரிவித்தார்.