அமராவதி: ஆந்திர காடுகளில் செம்மரம் வெட்டி கடத்தலில் ஈடுபட்டதாக தமிழ்நாட்டை சேர்ந்த 12 கூலி தொழிலாளர்கள் உள்பட 16 பேரை ஆந்திர மாநில காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

ஆந்திரா மாநிலம்  வனப்பகுதியில்  பல நூறு ஏக்கர்கள் அளவில் விலை உயர்ந்த செம்மரங்கள் உள்ளன. இதை வெட்டி கடத்தல் செய்வதில் ஆந்திரா மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த சில கும்பல்கள் ஈடுபட்டு வருகின்றன. இந்த மரங்களை வெட்டி கடத்தல் தொழிலுக்கு தமிழகத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளர்ளை அழைத்துச் செல்வது வாடிக்கையாக நடைபெற்று வருகிறது.  வேலூர் சுற்றுவட்டாரப் பகுதி மற்றும், பழங்குடியின மக்களிடம் அதிக கூலி ஆசைக்காட்டி புரோக்கர்கள் ஆந்திரா வனத்துக்கு அழைத்து சென்று மரங்களை வெட்டி கடத்தல் தொழிலில் ஈடுபடுத்தி வருகின்றனர். இதில் பல அப்பாவிகள் காவல்துறையினரிடம் சிக்கி இறப்பது மட்டுமல்லாமல் பலர் இன்னும் சிறையில் வாடிக்கொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையில், இன்று காலை ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தில் வனப்பகுதியில் செம்மரங்களை வெட்டி திருப்பதி வழியாக  கடத்துவதாக ஆந்திர காவல்துறைக்கு கிடைத்த தகவலைத் தொடர்ந்து, செம்மர கடத்தல் தடுப்பு அதிரடி பிரிவு போலீசார் மற்றும் காவல்துறையினர் அதிரடியாக நெடுஞ்சாலை உள்பட பல பகுதிகளில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

இதில், சந்தேகத்திற்கு இடமாக வந்த லாரி மற்றும் 2 காரை மடக்கி சோதனையில், அதில் செம்மரம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, 2 கார், லாரி மற்றும் அதிலிருந்த 49 டன் செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்த போலீசார், இது தொடர்பாக 16 பேரை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் 12 பேர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள். கைது செய்தவர்களில் கள்ளக்குறிச்சியை சேர்ந்தவர்கள் 9 பேர், திருவண்ணாமலையை சேர்ந்தவர்கள் 2 பேர், சேலத்தை சேர்ந்தவர் 1 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.