சென்னை:  தமிழ்நாடு முழுவதும்  உணவகங்களில் கடந்த சில நாட்களாக அதிரடி சோதனைகள் நடத்தப்பட்டு வரும் நிலையில், நேற்று மட்டும் பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில்  1024.75 கிலோ கெட்டுப்போன இறைச்சி,  பல கிலோ மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாகவும், கோவையில் மட்டும் 155 கிலோ கெட்டுபோன இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாகவும், ரூ.161 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டு இருப்பதாகவும்  உணவு பாதுகாப்புத்துறை  தெரிவித்து உள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் பிரபலமான  ‘ஐவின்ஸ்’ என்ற உணவகத்தில்  கடந்த 16ந்தேதி அசைவ உணவு வாங்கி சாப்பிட்ட சிறுமி உயிரிழந்த நிலையில், மேலும்   உ42 பேர் வயிற்றுபோக்கு வாந்தி ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு நாமக்கல் மாவட்ட அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து,  அந்த உணவகத்தில்  மாவட்ட உணவு பாதுகாப்பு துறை  அதிரடியாக சோதனை நடத்தி அரசிடம் அறிக்கை அளித்தது. தற்போது, அந்த அறிக்கையில் உள்ள தகவல் வெளியாகி உள்ளது. அதில், சம்பந்தப்பட்ட  ‘ஐவின்ஸ்’ உணவகத்தில் 16ம் தேதி இரவு 200 பேர் உணவு சாப்பிட்டுள்ளனர். அதில் 42 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். உணவகத்தில் சந்தேகப்படும் வகையில் வைக்கப்பட்டிருந்த மூன்று உணவு மாதிரிகள் எடுக்கப்பட்டு சேலம் உணவு பகுப்பாய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன. இதன் அறிக்கை விரைவில் தெரிய வரும்.  இந்த உணவகத்தில் இருந்த சந்தேகத்திற்குரிய 42 கிலோ இறைச்சி கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டதுடன் உணவகத்தின் உணவு பாதுகாப்பு உரிமம் ரத்து செய்யப்பட்டு உணவகம் சீல் வைக்கப்பட்டது.

அதைத்தொட்ர்ந்து ஷவர்மா மற்றும் சந்தேகத்திற்குரிய சிக்கன் போன்ற உணவு பொருட்களை விற்பனை செய்ய மாவட்டம் முழுதும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. மாவட்டம்முழுதும் உணவகங்களை ஆய்வு செய்யும் பணியும் நடந்து வருகிறதுஎன தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்த சம்பவம் மக்களிடையே அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில்,  தமிழ்நாடு முழுவதும் உணவகங்களில் சோதனை நடத்த மாநில சுகாதாரத்துறை உத்தரவிட்டது.

அதன்படி, மாநிலம் முழுவதும் அனைத்து பகுதிகளிலும் சுகாதாரத்துறையினர், உணவு பாதுகாப்பு துறையினல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். திருப்பூா் மாவட்டத்தில் உள்ள உணவகங்களில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் மேற்கொண்ட ஆய்வில் 16 கிலோ கெட்டுப் போன கோழி இறைச்சி ப கெட்டுப் போன மீன் இறைச்சி 3.5 கிலோ, காலாவதி ஆகி பயன்படுத்த முடியாத நிலையில் இருந்த சுமாா் 750 கிராம் மயோனிஸ் ஆகியவை கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது.

கோவையில், தொடர்ந்து மூன்றாவது நாளாக நேற்று ஷவர்மா விற்பனை செய்யும் கடைகளை ஆய்வு செய்ததில், நேற்று மட்டும்  155 கிலோ கெட்டுப்போன இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டு, கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. விதிமுறைகள் கண்டறியப்பட்டால் மாநகராட்சியை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குமரி மாவட்டத்தில்  40 கிலோ கெட்டுப்போன இறைச்சி மற்றும் சமைத்து கெட்டுப்போன நிலையில் இருந்த உணவுகள், உணவுப் பொருள்கள் ஆகியன பறிமுதல் செய்யப்பட்டன. முறையான பராமரிப்பின்றி உணவு தயாா் செய்த 7 உணவகங்களுக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் 5 கடைகளுக்கு ரூ.13 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை செங்குறிச்சி சுங்கச்சாவடி பகுதியிலுள்ள அசைவ உணவகங்களில்  நடத்தப்பட்ட சோதனையில் , 56 கிலோ கெட்டுப்போன இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது.  மேலும்,  ஒரு உணவகத்துக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தனா். மேலும், பொதுமக்கள் அளித்த புகாரின் அடிப்படையில் வீட்டில் அனுமதியின்றி சட்டத்துக்குப் புறம்பான வகையில் செயல்பட்ட குடிநீா் நிறுவனத்துக்கு மாவட்ட நியமன அலுவலா் சுகந்தன் சீல் வைத்து உத்தரவிட்டாா். தொடா்ந்து, அந்த நிறுவனத்தை நடத்தியவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு, நோட்டீஸ் வழங்கப்பட்டது.

சுற்றுலாத் தலமான நீலகிரி மாவட்டம் குன்னூரில் உணவு பாதுகாப்புத் துறையினர் உணவகங்களில் அதிரடி சோதனை நடத்தினர்… குளிர்சாதன பெட்டிகளில் வைக்கப்பட்டிருந்த கெட்டுப்போன பழைய உணவுகள், சிக்கன் மற்றும் இறைச்சிகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டன. மேலும், சம்பந்தப்பட்ட கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டது.

நெல்லை மாநகர பகுதிகளான பாளையங்கோட்டை, வண்ணாரப்பேட்டை, மேலப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் பதப்படுத்தப்பட்ட மற்றும் முறையாக பராமரிக்கப்படாத 150 கிலோ சிக்கன்களை பறிமுதல் செய்து அழித்துள்ளனர். தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் உள்ள உணவகங்கள், சவர்மா கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். அப்போது கெட்டுப்போன சுமார் 25 கிலோ கோழி இறைச்சியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.  தொடர்ந்து கடையநல்லூர், கிருஷ்ணாபுரம், யூனியன் அலுவலகம் ஆகிய பகுதிகளில் உள்ள கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி காலாவதியான உணவுப் பொருட்களை பறிமுதல் செய்து அழித்தனர். மேலும் இது தொடர்பாக 5 உணவகங்களுக்கு அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

இதுபோல மாநிலம் முழுவதும் பல இடங்களில் தொடர்ந்து சோதன நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், நேற்று (22ந்தேதி) மாநிலம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் உள்ள 1187 அசைவ உணவகங்களில் நடத்தப்பட்ட சோதனையில், ஒரே நாளில் 1024.75 கிலோ கெட்டுப்போன இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டு, அழிக்கப்பட்டன உணவு பாதுகாப்புத்துறை தெரிவித்து உள்ளது.

மேலும் கெட்டுப்போன இறைச்சி வைத்திருந்த  115அசைவ உணவகங்களிடம்  இருந்து ரூ.161 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது

உயிர் பலி வாங்கிய ‘ஷவர்மா’: உணவகங்களில் சோதனை செய்ய அதிகாரிகளுக்கு அமைச்சர் மா.சு. உத்தரவு…