காத்மா காந்தியின் 150வது பிறந்தநாளை யொட்டி பல நாடுகள் காந்தியின் தபால் தலை வெளியிட்டு கவுரவப்படுத்திவரும் நிலையில், தற்போது  பாலஸ்தீனம், துருக்கி, உஸ்பெஸ்கிஸ்தான் நாடுகள் தபால் வெளியிட்டு கவுரவித்து உள்ளது.

உலகின் மிக அதிக நாடுகளால் தபால் தலைகள் வெளியீடு மூலம் கவுரவப்படுத்தப்பட்ட தலைவர் என்ற பெருமை மகாத்மா காந்திக்கு உண்டு. அதுபோல தனது வாழ்நாளில் ஒருமுறை கூட விமானத்தில் பயணம் செய்யாத தலைவர் மகாத்மா காந்தி.

சமீபத்தில் இந்தியப் பிரதமர் மோடியை சந்தித்த ரஷ்யப் பிரதமர் புதின் ‘காந்தியடிகளின் 150ஆவது ஆண்டை ஒட்டி அவருக்கு ரஷ்யாவில் தபால்தலை வெளியிடப்படும்’ என்றார். அந்த தபால்தலைகள் ரஷ்ய தபால்துறையால் நேற்று வெளியிடப்பட்டு, அதன் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன.

காந்தியடிகளின் மறைவுக்குப் பின்னர் 1948 ஆகஸ்டு 15ஆம் தேதி இந்திய அரசு காந்தியடிகளுக்கு முதன்முறையாக தபால் தலைகளை வெளியிட்டது. பின்னர் 1961ஆம் ஆண்டில், அமெரிக்கா முதல் அயல்நாடாக காந்தியடிகளுக்கு தபால்தலையை வெளியிட்டு பெருமை தேடிக் கொண்டது.

1969ஆம் ஆண்டில் காந்தியடிகளின் உண்ணாவிரதங்களுக்கும் போராட்டங்களுக்கும் காரணமாக இருந்த இங்கிலாந்து அவருக்காக தபால் தலையை வெளியிட்டது. இதன் மூலம் இங்கிலாந்து தபால் தலையில் இடம்பெற்ற முதல் ஆங்கிலேயர் அல்லாதவர் என்ற சிறப்பை காந்தியடிகள் பெற்றார்.

அதே 1969ஆம் ஆண்டில் பிளவுக்கு முந்தைய சோவியத் யூனியனும் காந்தியடிகளுக்கு 6 கோன் மதிப்புடைய தபால் தலையை வெளியிட்டது.

பின்னர் இதுவரை பிரேசில், சிரியா, கியூபா, வெனிசுவேலா, ஜிப்ரால்டர் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகள் காந்தியடிகளுக்கு தபால் தலைகளை வெளியிட்டு உள்ளன. அதையடுத்து ரஷ்யா, பாலஸ்தீனம், துருக்கி, உஸ்பெஸ்கிஸ்தான் நாடுகள்  தபால் தலை வெளியிட்டு கவுரவப்படுத்தி உள்ளன.