சென்னை

தமிழக அரசின் தொடக்கக் கல்வித் துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் 1500 இடை நிலை ஆசிரியர்களை நியமிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் தொடக்கக் கல்வித் துறையின்கீழ் இயங்கும் 31,214 அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் சுமார் 35 லட்சம் மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். கொரோனா பரவலுக்குப் பிறகு, அரசுப் பள்ளிகளில் சுமார் 5 லட்சம் மாணவர்கள் புதிதாகச் சேர்ந்துள்ளனர்.  குறிப்பாக 1 முதல் 5-ம் வகுப்பு வரை மட்டும் 2.8 லட்சம் பேர் கூடுதலாக சேர்க்கப்பட்டனர்.

கடந்த  2013-14-ம் கல்வி ஆண்டுக்குப் பிறகு, தமிழக அரசால் இடைநிலை ஆசிரியர் பணிநியமனம் மேற்கொள்ளப்படவில்லை. தற்போது, மாணவர் எண்ணிக்கை அடிப்படையில், தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் மட்டும் 8,643 இடைநிலை ஆசிரியர் காலி பணியிடங்கள் உள்ளன. எனவே தொகுப்பு ஊதியத்தில் பட்டதாரிகள் நியமனம் செய்யப்பட்டு, மாணவர்களுக்கு கற்றல், கற்பித்தல் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

பெரும்பாலான பள்ளிகளில் ஒரு ஆசிரியர், இரு ஆசிரியர்களைக் கொண்டு இயங்கும் நிலை உள்ளதால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும் சூழல் இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. வரும் ஆண்டுகளில் ஓய்வு பெறும் இடைநிலை ஆசிரியர்கள் எண்ணிக்கையும் அதிகமாக இருப்பதால் காலி பணியிடங்களைத் துரிதமாக நிரப்ப வேண்டும் என ஆசிரியர் சங்கங்கள், கல்வியாளர்கள் தரப்பில் தொடர்ந்து கோரிக்கைகள் வைக்கப்பட்டு வந்தன.

அதன்படி, முதல்கட்டமாக 1,000 இடைநிலை ஆசிரியர்களை ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) மூலம் நியமனம் செய்து கொள்ளத் தமிழக அரசு கடந்த ஆண்டு உத்தரவிட்டது. தொடர்ந்து, தற்போது கூடுதலாக 500 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்பிக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் 1500 ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர்.