திருச்சி: விநாயகர் சதுர்த்தியை ஒட்டி திருச்சி மலைக்கோட்டை விநாயகருக்கு 150 கிலோ கொழுக்கட்டை படையல் செய்யப்பட்டது. விநாயகரை தரிசிக்க ஏராளமானோர் குவிந்துள்ளனர். இதனால் அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மலைக்கோட்டை விநாயகர் கோயிலில் இன்று காலை முதல் சிறப்பு வழிபாடுகளும், பூஜைகளும் நடைபெறுவருகிறது. ஏராளமான பக்தர்கள் வழிபாடு செய்தனர். இன்றைய தினத்தின் முக்கிய படையலாக விநாயகருக்கு கொழுக்கட்டை படைத்து, அதை பக்தர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டு வருகிறது.

அதன்படி, இன்று  திருச்சி மலைக்கோவில் உச்சி பிள்ளையாருக்கு 150 கிலோ கொழுக்கட்டை படைக்கப்பட்டது. மலை கோட்டையின் அடிவாரத்தில் உள்ள மாணிக்க விநாயகருக்கு இன்று காலை சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. தொடர்ந்து 75 கிலோ கொழுக்கட்டை மாணிக்க விநாயகருக்கு படைக்கப்பட்டது. அதனை தொடந்து மலை கோட்டையின் உச்சியில் உள்ள உச்சி பிள்ளையாருக்கும் 75 கிலோ கொழுக்கட்டை படைக்கப்பட்டது. சிவாசாரிகள் அந்த 75 கிலோ கொழுக்கட்டையை சுமந்து வந்து விநாயகருக்கு படைத்தனர்.

முன்னதாக மலை கோட்டை கோயிலில் உள்ள கோயில்யானை லட்சுமிக்கு அலங்காரங்கள் செய்யப்பட்டு, பழங்கள் படைக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. இந்த விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஏராளமான பக்த்தர்கள், விநாயகரை வழிபட்டு வந்தனர். மக்கள் கூட்டம் அதிகரித்துள்ளதால், காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.