சென்னை: சென்னையில் பொது இடங்களில் பொதுமக்கள் முக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என சென்னை மாநகராட்சி உத்தரவிட்டு உள்ளதுடன், பேருந்து களில் பயணம் செய்பவர்களும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், பொது இடங்களில் கட்டாயம் முகக்கவசம் அணிவதை கண்காணிக்க மண்டலம் வாரியாக குழுக்கள் அமைத்து சென்னை மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கடந்த இரு வாரங்களாக தொடர்ந்து, சென்னையில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. சென்னையில் தினசரி பாதிப்பு ஆயிரத்தை தாண்டியுள்ளது. இதையடுத்து, பொதுமக்கள் அனைவரும் கட்டயாம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று சென்னை மாநகராட்சி சார்பில் அறிவுறுத்தல் வழங்கப்பட்டு இருந்தது. மேலும், முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.500 அபாராதம் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இருந்தாலும் பொதுமக்கள் பலர் முக்கவசம் அணிவதை தவிர்த்து வருகின்றனர்.
இந்த நிலையில், பொதுமக்கள் முகக்கவசம் அணிவதை கண்காணிக்க மண்டலம் வாரியாக 15 சிறப்பு கண்காணிப்புக் குழுக்கள் அமைத்து சென்னை மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டுள்ளார். இந்தக் குழுவில் மாநகராட்சி மண்டல சுகாதார அலுவலர் தலைமயிலான குழுவில் 2 சுகாதார ஆய்வாளர் மற்றும் 2 தேசிய நகர்ப்புற நலவாழ்வு பணியாளர்களும் இருப்பார்கள் என்றும், அவர்கள் பொது இடங்களில் கொரோனா தடுப்பு பாதுகாப்பு விதிகளை மக்கள் கடைப்படிக்கிறார்களா என தீவிரமாக கண்கானிப்பதுடன், திடீர் சோதனை நடத்தி, முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கவும் செய்வார்கள் என கூறப்பட்டு உள்ளது.
மேலும், பொதுஇடங்களில் முகக்கவசம் அணிவது தொடர்பாக சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி. திருமண மண்டபங்கள், திரையரங்குகள், வணிக வளாக உரிமையாளர்கள் மற்றும் போக்குவரத்து மேலாண் இயக்குநருக்கு கடிதம் எழுதி உள்ளார். அதில்,
- பொதுமக்கள் அதிகளவில் உள்ள இடங்களில் சமூக இடைவெளி கடைபிடிப்பது மற்றும் முகக்கவசம் அணிவதை உறுதி செய்ய வேண்டும்.
- பேருந்துகளில் பணியில் உள்ள ஓட்டுநர் மற்றும் நடத்துநர் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்.
- பேருந்து பயணிகள் அனைவரும் முககவசம் அணிவதை நடத்துனர் உறுதி செய்ய வேண்டும்.
- பேருந்து பணிமனைகளில் பணியாளர்கள் முகக்கவசம் அணிவதையும் சமூக இடைவெளியை பின்பற்றுவதையும் அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்.
- கடைகளில் பணிபுரியும் பணியாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் சமூக இடைவெளியுடன் இருப்பதையும், முகக்கவசம் அணிவதையும் உறுதிப்படுத்த வேண்டும்.
- அவ்வபோது கிருமி நாசினி கொண்டு துாய்மைப் பணிகள் மேற்கொள்ள வேண்டும்.
- திருமண மண்டபங்கள் மற்றும் வழிப்பாட்டு தலங்களில் அதிக கூட்டம் கூடுவதை தவிர்க்கும்படி சம்பந்தப்பட்ட நிர்வாகங்கள் அறிவுறுத்த வேண்டும்.
- வணிக நிறுவனங்கள் கரோனா பாதுகாப்பு வழிமுறைகள் பின்பற்றுவதை கண்காணிக்க பொறுப்பு அலுவலர் நியமிக்க வேண்டும்.