சென்னை: தமிழக மீனவர்கள் எல்லைத்தாண்டி வந்ததாக கூறி 15 மீனவர்களுடன் அவர்களுடையை விசைபடகுகளையும் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துள்ளனர். இது தமிழக மீனவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக மீனவர்கள், கடலில் மீன்பிடித்துக்கொண்டிருக்கும்போது, அவர்கள் எல்லை தாண்டி வந்து மீன் பிடிப்பதாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்யும் நடவடிக்கை தொடர்ந்து வருகிறது. இதுதொடர்பாக ஏற்கனவே பலமுறை இந்தியா, இலங்கை நாடுகளுக்கு இடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையில், இரு நாட்டு மீனவர்களுக்கு இடையேயும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இருந்தாலும் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது தொடர்ந்து வருகிறது.
இந்த நிலையில், நாகை பகுதி மீனவர்கள் உள்பட 15 மீனவர்களையும், அவர்களின் விசைப்படகுகளையும் இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். அவர்களை இலங்கையில் உள்ள காங்கேசன்நகர் கடற்கரை முகாமிற்கு அழைத்துச் சென்று இலங்கை கடற்படையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சம்பவத்தன்று, காரைக்கால் கிளிஞ்சல்மேடு சுனாமிநகரை சேர்ந்த முருகானந்தம் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் கடந்த 13-ந்தேதி நாகப்பட்டினம் டாடா நகரை சேர்ந்த சேகர், மயிலாடுதுறை புதுக்கோட்டையை சேர்ந்த சந்துரு, மோகன், காரைக்காலை சேர்ந்த முருகானந்தம், இரும்பன், பாபு, பரசுராமன், முருகன், சுந்தரவேல், வடிவேல் உள்ளிட்ட 15 பேர் விசைப்படகில் மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர். அவர்கள் நேற்று யாழ்பாணம் அருகே மயிலட்டி என்ற பகுதியில் மீன் பிடித்ததாக கூறப்படுகிறது. அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லைதாண்டி வந்தாக கூறி மீனவர்கள் 15 பேரையும் கைது செய்தனர். அவர்கள் வந்த படகையும் பறிமுதல் செய்தனர். பின்னர் மீனவர்கள் காங்கேசன்நகர் கடற்கரை முகாமிற்கு அழைத்துச் சென்று இலங்கை கடற்படையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதன் பின்னர் அவர்கள் யாழ்பாணம் மீன்வளத்துறையினரிடம் ஒப்படைக்கப்படனர்.
கடலில் மீன் பிடிக்க சென்ற தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்த சம்பவம் மீனவர்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கைது செய்யப்பட்ட மீனவர்களை உடனடியாக மீட்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் மீனவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.