டில்லி

நாளை விவசாயிகள் போராட்டம் நடைபெறுவதையொட்டி டில்லியில்144 தடை உத்தரவு அமலாகி உள்ளது.

நாளை அதாவது பிப்ரவரி 13 ஆம் தேதி பயிர்களுக்குக் குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதி செய்யும் புதிய சட்டத்தை இயற்றுவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சம்யுக்தா கிசான் மோர்ச்சா, கிசான் மஸ்தூர் மோர்ச்சா உள்ளிட்ட 200-க்கும் அதிகமான விவசாயச் சங்கங்கள் ‘டில்லி சலோ’ என்ற பெயரில் மத்திய அரசுக்கு எதிராக டில்லியில் பேரணி நடத்தப் போவதாக அறிவித்துள்ளன. எனவே நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் பலரும் டெல்லியை நோக்கிப் புறப்பட்டு வருகின்றனர்.

ஏற்கனவே கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த விவசாயிகள் போராட்டத்தின் போது அம்மாநில தெருக்களில் காவல்துறையினருக்கும், விவசாயிகளுக்கும் இடையில் நடந்த மோதல் மீண்டும் நடந்து விடக்கூடாது என்பதற்காக விவசாயிகள் பேரணியை எதிர்கொள்ள டில்லி போலீஸார் அனைத்து விதங்களிலும் தயாராகி வருகின்றனர்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டில்லி எல்லைப் பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

காவல் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“சில விவசாய அமைப்புகள் நாளை (பிப்.13) பேரணிக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளதாகத் தகவல் கிடைத்தது. வேளாண் பொருள்களுக்குக் குறைந்த பட்ச ஆதரவு விலைக்கு சட்டப்பூர்வமான அந்தஸ்து உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை டெல்லியில் அமர்ந்து போராட்டம் நடத்துவார்கள் எனவும் தகவல் கிடைத்தது. இதையொட்டி, டெல்லியில் குறிப்பாக வடகிழக்கு டெல்லி பகுதிகளில் குற்றவியல் நடைமுறைச் சட்டம், 144-வது பிரிவின்படி தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

அந்த வகையில் அண்டை மாநிலங்களிலிருந்து டெல்லிக்கு விவசாயிகள் அணி திரண்டால் அதைத் தடுக்க நூற்றுக்கணக்கான போலீஸார் எல்லைப் பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளனர். இதே போன்று பஞ்சாப் – ஹரியாணா எல்லைகளில் ‘டெல்லி சலோ பேரணி’யை முறியடிக்கும் விதமாக அம்பாலா, ஜிந்த், ஃப்தேஹாபாத் போன்ற மாவட்ட எல்லைகளை மூடுவதற்கு விரிவான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.  

அரியானாவின் 7 மாவட்டங்களில் இணையச் சேவை ரத்து, குறுஞ்செய்திகளுக்கான தடை போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக மாநில காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், ‘டெல்லி சலோ’ பேரணியை பல்வேறு விவசாயிகள் சங்கங்கள் மறுத்துள்ளன”  

என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.