சென்னை: மதுரை அமலாக்கத்துறை அதிகாரி ரூ.21 லட்சம் லஞ்சம் வாங்கியபோது, தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டதன் எதிரொலியாக, சென்னை அமலாக்கத் துறை அலுவலகத்தில் மத்திய பாதுகாப்பு படை குவிக்கப்பட்டு உள்ளது. மதுரை அமலாக்கத்துறை மண்டல அலுவலகத்தில் விடிய விடிய 13 நேரத்துக்கும் மேலாக நடைபெற்றுவந்த லஞ்ச ஒழிப்பு போலீசாரின் சோதனை முடிவுக்கு வந்தது.

மதுரையில் லஞ்ச ஒழிப்பு சோதனை அதிகாரி திவாரி கைது செய்யப்பட்ட நிலையில், மதுரையில் உள்ள அவரது வீடு மற்றும் மத்தியஅரசுக்கு சொந்தமான அமலாக்கப்பிரிவு அலுவலகம் சோதனையிடப்பட்டது. இதையடுத்து,  சென்னை சாஸ்திரிபவனில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகம் நேற்று இரவு முதல் முழு மத்திய பாதுகாப்பு படையின் பாதுகாப்புக்கு   கொண்டு வரப்பட்டது.

திண்டுக்கல்லைச் சோ்ந்த அரசு மருத்துவா் சுரேஷ்பாபுவிடம் லஞ்சம் வாங்கியதாக மதுரையைச் சோ்ந்த அமலாக்கத் துறை அதிகாரி அங்கித் அதிகாரி,  தமிழக லஞ்ச ஒழிப்புத்துறையினரால்  கைது செய்யப்பட்டாா். இது தொடா்பாக வழக்குப் பதிவு செய்த லஞ்ச ஒழிப்புத்துறையினா், அங்கித் திவாரி வீடு,அலுவலகம் ஆகியவற்றில் சோதனை செய்து, முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்தனா்.   சுமார் 13மணி நேரம் நடைபெற்ற இந்த சோதனை முடிவுக்கு வந்தது.

இதற்கிடையே அங்கித் திவாரி வீடு, அலுவலகத்தில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் மேலும் சில அமலாக்கத் துறை அதிகாரிகளின் வீடுகளிலும், அலுவலகத்திலும் லஞ்ச ஒழிப்புத்துறையினா் சோதனை நடத்தவுள்ளதாக தகவல் வெளியானது.

இத் தகவலின் காரணமாக, வெள்ளிக்கிழமை இரவு 10 மணிக்கு சென்னை நுங்கம்பாக்கம் சாஸ்திரிபவனில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்துக்கு மத்திய ரிசா்வ் பாதுகாப்பு படையினா் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனா். வழக்கமாக அந்த வளாகத்தில் இரவு பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் தனியாா் செக்யூரிட்டி நிறுவன காவலாளியிடமிருந்த நுழைவுவாயில் கதவு சாவியை வாங்கிய மத்திய ரிசா்வ் பாதுகாப்பு படையினா், உடனே நுழைவு வாயில் கதவை இழுத்து மூடி பூட்டினா். மேலும், வளாகத்தைச் சுற்றிலும் துப்பாக்கியுடன் மத்திய ரிசா்வ் பாதுகாப்பு படையினா் நிறுத்தப்பட்டனா்.

லஞ்ச ஒழிப்புத்துறையினா் அங்கு வர வாய்ப்புள்ளதாக தகவல் பரவியதால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. லஞ்ச வழக்கில் மத்திய புலனாய்வு அமைப்பைச் சோ்ந்த ஒரு அதிகாரியை தமிழக லஞ்ச ஒழிப்புத் துறையினா் கைது செய்வது இதுவே முதல் முறை என கூறப்படுகிறது.