கோவை: இந்திய தேசிய காங்கிரஸின் 137வது நிறுவன நாள் இன்று நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினரால் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ செல்வபெருந்தகை, அடுத்த  நாடாளுமன்ற தேர்தலில்  காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் நம்பிக்கை தெரிவித்தார்.

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் 137வது நிறுவன நாளை முன்னிட்டு, தமிழ்நாட்டில், காங்கிரஸ் கட்சி சார்பில் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. மாநில, மாவட்ட தலைவர்கள் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு, காங்கிரஸ் கட்சியை வளர்த்த தியாக சீலர்களான கோகலே, மகாத்மா காந்தி, ஜவகர்லால் நேரு, காமராஜர், இந்திரா காந்தி, ராஜிவ்காந் உள்பட தற்போதைய தலைவர்களின் பங்களிப்பு குறித்து பேசியும், காங்கிரஸ் கட்சியை மேலும் வலுப்படுத்துவது குறித்தும் தொண்டர்களிடையே எழுச்சியுரை ஆற்றி வருகின்றன.

இந்த நிலையில், கோயமுத்தூரில் உள்ள  கோபாலபுரம் பகுதியில் உள்ள  மாவட்ட காங்கிரஸ் தலைமையகமான காமராஜ் பவனில் இன்று நடைபெற்ற 137வது ஆண்டு துவக்க விழாவில், சென்னையை அடுத்த  ஸ்ரீபெரும்புதூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற குழு தலைவருமான செல்வப்பெருந்தகை கலந்து கொண்டு, காங்கிரஸ் கட்சி கொடியேற்றி வைத்து மரியாதை செய்தார். தொடர்ந்து அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.

இதையடுத்து செய்தியளார்களை சந்தித்த  செல்வப்பெருந்தகை, “மத்தியில் உள்ள பா.ஜ.க.அரசை அகற்றி, வரும் தேர்தலில் இளம் தலைவர் ராகுல் காந்தியை பிரதமராக்குவதே இந்த நாளில் பிரகடனப்படுத்துகிறேன்” என தெரிவித்தார். மேலும், வரும் நாடாளுமன்ற தேர்தலில் மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசை அகற்றிவிட்டு, காங்கிரஸ் கட்சி நாடு முழுவதும் அமோக வெற்றி பெற்று, மத்தியில்  ஆட்சி அமைக்கும் நம்பிக்கை தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில், காங்கிரஸ் கட்சியின்  செயல் தலைவர் மயூரா ஜெயக்குமார் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.