சென்னை:

மிழகத்தில் சென்னை உள்பட 4 மாவட்டங்களுக்கு 12 நாள் முழு ஊரடங்கு உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், அரிசி ரேசன் அட்டை தாரர்களுக்கு ரூ.1000 நிவாரண உதவி வழங்க தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.

இதையடுத்து,   அடையாள அட்டை வைத்துள்ள சுமார் 13.35 லட்சம் மாற்றுத்திறனாளிகளுக்கு தலா 1,000 ரூபாயை நிவாரணமாக வழங்க தமிழக முதல்வர் பழனிசாமி இன்று உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

“தமிழக அரசு, கரோனா நோய்த்தொற்று பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுப்பதோடு மட்டுமல்லா மல், ஏழை, எளிய மக்களுக்குத் தேவையான நிவாரணங்களை வழங்கியும், பொருளாதார மீட்பு நடவடிக்கைகளை முனைப்புடன் செயல்படுத்தியும் வருகிறது. இதன் காரணமாக, தமிழ்நாட்டில் சிகிச்சைக்குப் பின் குணமடைந்து வீடு திரும்புவோர் சதவீதம் நாட்டிலேயே அதிகமாகவும், நோய்த் தொற்றினால் ஏற்படும் உயிரிழப்பு மிகக் குறைவாகவும் இருந்து வருகிறது.

கரோனா வைரஸ் நோய்த் தொற்றைத் தடுப்பதற்காக மத்திய அரசு, இந்தியா முழுவதும், தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியதைத் தொடர்ந்து, தமிழ்நாடு அரசும், ஊரடங்கை 30.6.2020 வரை அமல்படுத்தியுள்ளது.

ஊரடங்கு காலத்தில், மாற்றுத் திறனாளிகளின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு, தமிழ்நாட்டில் அடையாள அட்டை வைத்துள்ள சுமார் 13.35 லட்சம் மாற்றுத் திறனாளிகளுக்கு தலா 1,000 ரூபாய் ரொக்க நிவாரணமாக வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்”.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.