சென்னை: முன்னாள் அமைச்சர்  எஸ்.பி.வேலுமணி மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ள நிலையில், அவர்மீதான  ரூ.811 டெண்டர்  கோடி முறைகேடு விவகாரத்தில் 4ஐஏஎஸ் உள்பட 12அதிகாரிகள் உடந்தையாக இருந்தது தெரிய வந்துள்ளதாக, இதுகுறித்து விசாரணை நடத்தி வரும் லஞ்ச ஒழிப்புத்துறை திமுக அரசுக்கு கடிதம் எழுதி உள்ளது. இதனால், தமிழகஅரசு செய்வதறியாமல் திகைத்துள்ளது.

மாநகராட்சிகள் டெண்டர் முறைகேட்டில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது ஊழல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு உள்ளது. சென்னை மற்றும் கோயமுத்தூர் மாநகராட்சிகளில்  விடப்பட்ட ரூ.811 கோடிக்கு ெடண்டர் விட்டதில் அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக, திமுக ஆட்சி அமைந்ததும், எஸ்.பி.வேலுமணி மீது லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் வழக்கு தொடர்ந்து, ரெய்டு நடத்தியதுடன், பல்வேறு நபர்களிடம் விசாரணை நடத்தி ஆய்வு மேற்கொண்டனர்.

இதில், வேலுமணிக்கு உடந்தையாக 4 ஐஏஎஸ் அதிகாரிகள் உள்பட 12 அதிகாரிகள் செயல்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது. இந்த முறைகேட்டில் அதிகாரிகளின் தொடர்புள்ளதற்கான ஆதாரங்கள் லஞ்ச ஒழிப்பு துறையிடம் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது. அதன் அடிப்படையில் 4 ஐஏஎஸ் அதிகாரிகள் உள்பட 12 அதிகாரிகளையும் இந்த வழக்கில் சேர்க்க லஞ்ச ஒழிப்பு துறை முடிவு செய்துள்ளது. இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தமிழக அரசுக்கு  கடிதம் எழுதியுள்ளனர்.

அதில் குறிப்பிட்ட 4 ஐஏஎஸ் அதிகாரிகள் உள்பட 12 அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்ய அனுமதி கோரப்பட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.  ஆனால், இதுவரை அனுமதி கிடைக்கவில்லை. இந்த அனுமதி கிடைத்ததும், அவர்கள் அனைவரும் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டு அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என்று லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இது அரசு அதிகாரிகள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

முறைகேட்டில் தொடர்புடைய அதிகாரிகள் பட்டியல்:

சென்னை மாநகராட்சி கமிஷனராக இருந்த பிரகாஷ், கோவை மாநகராட்சி கமிஷனராக இருந்த விஜய் கார்த்திகேயன், சென்னை மாநகராட்சி துணை கமிஷனர்களாக இருந்த கந்தசாமி, மதுசூதனன் ரெட்டி, சென்னை மாநகராட்சியின் தலைமை பொறியாளராக இருந்த நந்தகுமார், முதன்மை பொறியாளராக இருந்த புகழேந்தி, தலைமை பொறியாளர் செந்தில்நாதன் உள்பட 12 பேர்.

பொதுவாக அரசியல்வாதிகள் ஊழல் செய்வதற்கு பின்புலமாக செயல்படுபவர்கள் அதிகாரிகள்தான். அதிகாரிகள் சரியான முறையில் பணியாற்றினால், எந்தவொரு முறைகேடுகளும் நடைபெற வாய்ப்பு இருக்காது. பொதுமக்களுக்கான பணிகள் திறம்பட செயல்படும். ஆனால், பல அதிகாரிகள் அரசியல்வாதிகளுடன் கைகோர்த்துக்கொண்டு,  முறைகேடுகளை எவ்வாறு செய்ய வேண்டும் என ஆலோசனை வழங்கி, அவர்களும் லாபம் சம்பாதித்து வருகின்றனர். ஆனால், பல முறைகேடுகளில் அரசியல்வாதிகள் சிக்கிக்கொண்டாலும், அதிகாரிகள் சிக்கப்படுவது இல்லை. பணியிட மாற்றம் மட்டுமே அவர்களுக்கு தண்டனையாக அளிக்கப்படுகிறது.  ஆனால், இந்த டெண்டர் முறைகேடு வழக்கில் பல அதிகாரிகள் பெயர் பகிரங்கமாக வெளியாகி உள்ளதால், அவர்கள்மீது தமிழகஅரசு நடவடிக்கை எடுக்குமா அல்லது வழக்கை கிடப்பில் போடுமா என்பது கேள்விக்குறியாகி உள்ளது. 

அதிகாரிகள் மீது தமிழகஅரசு கடுமையான நடவடிக்கை எடுக்க முன்வந்தால், தற்போது பணியில் இருக்கும் மற்ற ஐஏஎஸ் அதிகாரிகள் உள்பட பல அரசு அதிகாரிகள், தமிழகஅரசின் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதில் சிக்கலை ஏற்படுத்தலாம். அதனால், இந்த விஷயத்தில் தமிழகஅரசு மவுனம் காத்து வருகிறது.

இதுதொடர்பாக அறப்போர் இயக்கமும் தனது முகநூல் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளது.