ராமேஷ்வரம்: ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே இலங்கையிலிருந்து கடத்திவரப்பட்டு கடலில் வீசப்பட்ட  தங்கத்தில், 20 கிலோ தங்கம் இதுவரை மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும், தொடர்ந்து நடுக்கடலில் தேடுதல் பணி நடைபெற்று வருகிறது என கடலோர காவல்படையினர் தெரிவித்து உள்ளனர். இதுதொடர்பாக ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 இஸ்லாமியர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

இலங்கையிலிருந்து மண்டபம் வழியாக ராமநாதபுரம் மாவட்டத்துக்கு தங்கக் கட்டிகள் கடத்தி வரப்படுவதாகக் கிடைத்த தகவலையடுத்து, கடந்த புதன்கிழமை அன்று ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் பகுதியில் கடலோர காவல்படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.  அவர்களுடன் மத்திய வருவாய்ப் புலனாய்வுத் துறை அதிகாரிகளும் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில், மண்டபம் நோக்கி, இலங்கையில் இருந்து நாட்டுப் படகு ஒன்று வந்து கொண்டிருந்தது.  இதை கண்ட அதிகாரிகள் அந்த படகை மடக்க சுற்றி வளைக்கத் தொடங்கினார். இதனால் அதிர்ச்சி அடைந்த கடத்தல்காரர்கள், படகில் இருந்த மூட்டைகளை கடலுக்குள் தூக்கி வீசினர்.  இதையடுத்து படகில் இருந்த  3 பேரையும் கைது செய்த கடலோர காவல்துறையினர், அவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் கொண்டு வந்தது தங்கம் என்பது தெரிய வந்தது. மேலும், அவர்கள் 3 பேரும் மண்டபம் பொங்காலி தெருவைச் சோ்ந்த அமீா்அலியின் மகன்கள் நாகூா்கனி (30), அன்வா் (25), இப்ராஹிம் மகன் மன்சூா்அலி (25) ஆகியோர் என தெரிய வந்தது.

இதையடுத்து, அவர்கள்  கடலில் வீசிய மூட்டை கைப்பற்றும் வகையில்,  10-க்கும் மேற்பட்ட நீச்சல் வீரா்களின் உதவியுடன் கடலோர காவல்படை தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.  மேலும் கைது செய்யப்பட்டவர்களை,  படகில் அழைத்துச் சென்று அவர்கள் மூட்டையை வீசிய அடையாளம்  கண்டு பிடிக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடைபெற்று வந்தது.  அதன்படி, அங்கு தேடியதில்,  இதுவரை கடலில் வீசப்பட்ட 20 கிலோ தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் தேடும் பணி நடைபெற்று வருகிறது.