கவரத்தி: லட்சத்தீவில் புதிய விதிமுறைகளை அமல்படுத்த துடிக்கும் நிர்வாக அதிகாரி  பிரபுல் கோடா படேலை திரும்பபெற வலியுறுத்தி இன்று உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது.

பழங்குடி மக்கள் பெரும்பான்மையாக வாழும் சுற்றுத்தலமான லட்சத்தீவுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு புதிய அதிகாரியாக முன்னாள் மத்தியஅமைச்சர்  பிரபுல் கோடா படேல் மத்திய அரசால் நியமிக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து, அந்த தீவில் பல்வேறு விதிமுறைகள் மாற்றப்பட்டு வருகின்றன. அதன்படி,

லட்சத்தீவில் மாட்டிறைச்சி தடை, குண்டர் சட்டம்,  இரண்டுக்கும் மேற்பட்ட குழந்தைகள் பெற்றால், அவர்கள் தேர்தலில் நிற்க தடை, கடற்கரையில் குடில்கள் அமைக்க தடை, மதுவிலக்கு நீக்கம்,  படகு நிறுத்தம் மற்றும் ஹெலிகாப்டர் தளங்களில் சிசிடிவி கேமரா கட்டாயம் . நிலத்தை கையகப்படுத்தும் அதிகாரங்களைக் கொண்ட சட்டங்களை இயற்றுதல்,  உள்ளிட்ட மேலும் சில மாற்றங்களை  கொண்டு வந்துள்ளார்.

இதற்கு இஸ்லாமியர்கள் உள்பட பல தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும்,  காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகளும் கண்டனம் தெரிவித்து உள்ளன. காங்கிஸ் தலைவர் ராகுல் காந்தி, மத்திய அரசு இந்த விவகாரத்தில்  தலையிட வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு கடிதம் வாயிலாக வலியுறுத்தினார். கேரள சட்டசபையில், லட்சத்தீவு நிர்வாக அதிகாரியை நீக்கக் கோரி கேரள சட்டசபையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. புதிய விதிமுறைகளை திரும்ப பெற வேண்டும் என அம்மாநில எம்.பி.  முகமது பைசல் மத்தியஅரசிடம் வலியுறுத்தி வருகிறார்.

இந்த நிலையில், நிர்வாக அதிகாரி பிரபுல் பட்டேலை திரும்ப பெறக்கோரி லட்சத்தீவு மக்களில் பெரும்பாலானோர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். குழந்தைகள், பெரியவர்கள், பெண்கள் உள்ளிட்ட அனைவரும் தங்கள் குடும்பத்தினருடன் வீடுகளில் இருந்தவாறு 12 மணி நேரம் உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர்.