தொடரும் லாக்டவுன் என்ற பேராபத்து: நாடு முழுவதும் ஊதியத்தை இழந்த 12 கோடி தொழிலாளர்கள்

Must read

பெங்களூரு: லாக்டவுன் காரணமாக நாடு முழுவதும் 12 கோடி தொழிலாளர்கள் மார்ச் மாத ஊதியத்தை இழந்துள்ளனர்.

கிட்டத்தட்ட 70 முதல் 80 சதவீதம் தொழிலாளர்கள் இந்த இழப்பை சந்தித்துள்ளனர் என்று ஒரு ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. லாக்டவுன் தொடர்ந்தால் அடுத்து வரும் மாதங்களில் அவர்கள் தங்களது வேலையை இழப்பர் என்று நிபுணர்கள் கணித்துள்ளனர்.

இந்த நிலை கடந்த மாதத்தின் 2வது வார தொடக்கத்தில் இருந்தே காணப்பட்டது. 3 கோடி மக்கள் மட்டுமே தங்களது வேலை வாய்ப்பை அப்படியே வைத்துள்ளனர் என்றும் தெரிய வந்திருக்கிறது.

அதே போல பயணம், விருந்தோம்பல், சுற்றுலா, விமான போக்குவரத்து, சில்லறை விற்பனை, வெளிப்புற பொழுதுபோக்கு, உணவு மற்றும் பானங்கள் மற்றும் ரியல் எஸ்டேட் துறைகள் தொடர்ந்து மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன.

ஆட்டோமொபைல், நுகர்வோர் பொருட்கள், கோழி வியாபாரம், பால் பொருட்கள் விற்பனை கப்பல் மற்றும் கட்டுமானம் ஆகிய துறைகளிலும் இதன் தாக்கம் இனி இருக்கும் என்று கருதப்படுகிறது. லாக்டவுன் நீக்கப்பட்ட பின்னர், மேலும் சவால்கள் உருவாகும்.

லாக்டவுன் தொடக்கத்திலிருந்து வாழ்வாதாரம் இல்லாமல் இருந்த முறைசாரா துறை தொழிலாளர்களுக்கு, இது தினசரி போராக இருந்து வருகிறது.  ஒப்பந்த ஊழியர்கள் மற்றும் பகுதிநேர வேலை வைத்திருப்பவர்கள் பெரும்பாலும் மணிநேரத்திற்கு ஊதியம் பெறுகிறார்கள், ஆனால் லாக்டவுனால் அவர்களுக்கு இப்போது வருமானம் இல்லை.

உதான், ஸ்விக்கி, மீஷோ மற்றும் பிளாக்-பக் போன்ற நிறுவனங்கள் கடந்த சில வாரங்களாக ஒப்பந்த ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளன. சில தருணங்களில் மீண்டும் வியாபாரம் கிடைப்பது போன்று காணப்பட்டாலும் 40 முதல் 50 சதவீதம் மக்கள் இதன் தேவையை இப்போது ஒதுக்கி வைக்க ஆரம்பித்துள்ளனர் என்றும் நிபுணர்கள் கூறி இருக்கின்றனர்.

More articles

Latest article