சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் களஆய்வு செய்து வரும் முதலமைச்சர் ஸ்டாலின் இன்று நடைபெற்ற அரசு விழாவில், சிவகங்கை மாவட்டத்தில் பயனர்களுக்கு மக்கள் நலத்திட்டங்களை வழங்கியதுடன் மருதுபாண்டியர் சிலைகளுக்கு அடிக்கல் நாட்டியதுடன், சுதந்திரப் போராட்ட வீரர் வாளுக்குவேலி அம்பலத்தின் சிலையை திறந்து வைத்தார்.
விழாவில் சிறப்புரை ஆற்றிய முதலமைச்சர் ஸ்டாலின், சிவகங்கை சிறப்பினையும், திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகளையும் எடுத்துரைத்தார். அத்துடன், திமுக கொடுத்த 505 வாக்குகுறுதிகளில் 389 வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டு உள்ளதாகவும், 116 வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டியுள்ளது என்று கூறியதுடன், தவழ்ந்து தவழ்ந்து தமிழ்நாட்டை தரைமட்டத்திற்கு கொண்டு வந்த எடப்பாடி திமுக அரசை வீழ்த்த நினைக்கிறார் என்று கடந்த அதிமுக ஆட்சியையும், அதிமுகவையும் விமர்சனம் செய்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரண்டு நாள் பயணமாக சிவகங்கை மாவட்டத்தில் ஆய்வு செய்து வருகிறார். நேற்று காரைக்குடி பகுதியில் ஆய்வு நடத்திய நிலையில், இன்று சிவகங்கையில் ஆய்வு செய்து வருகிறார்.
இன்று காலை சிவகங்கை மாவட்டத்தில் நடைபெறும் அரசு விழாவில் சிவகங்கைச் சீமையை ஆண்ட மருது சகோதரர்களுக்கு ரூ.1 கோடி மதிப்பீட்டில் அமையப்பெறும் திருவுருவச் சிலைகளுக்கு அடிக்கல் நாட்டியதுடன், சுதந்திரப் போராட்ட வீரர் வாளுக்கு வேலி அம்பலத்துக்கு ரூ.50 இலட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள திருவுருவச் சிலையினைத் திறந்து வைத்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், சிவகங்கைச் சீமையை ஆண்ட மாமன்னர்கள் மருது சகோதரர்களுக்கு சிவகங்கையில் சிலை அமைத்து சிலை அமைத்துப் பெருமை சேர்த்திடவேண்டும் என்று பல்வேறு தரப்பினரால் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. அந்தக் கோரிக்கைகளை ஏற்று, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், அம்மாமன்னர்களுக்குப் பெருமை சேர்க்கின்ற வகையில், சிவகங்கை மாவட்டம் காளையார் கோயிலில் உள்ள வீரமங்கை வேலுநாச்சி யார் நினைவிடம் அருகில் ரூ.1 கோடியே 6 இலட்சத்து 90 ஆயிரம் மதிப்பீட்டில் அமைக்கப்படவிருக்கும் புதிய திருவுருவச் சிலைகளுக்காக இன்று (22.1.2025) சிவகங்கை மன்னர் துரைசிங்கம் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற அரசு விழாவில் அடிக்கல் நாட்டினார்.
வீறு கவியரசர் முடியரசன் அவர்கள் தேனி மாவட்டம் பெரியகுளம் சுப்பராயலு சீதாலட்சுமி இணையருக்கு 1920-ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் 7-ஆம் நாள் பிறந்தார். தனது இயற்பெயரான துரைராசுவை முடியரசன் என்று மாற்றிக் கொண்டவர். தந்தை பெரியார் அவர்களால் பகுத்தறிவுக் கவிஞன் முடியரசரன் என்றும், பேரறிஞப் பெருந்தகை அண்ணா அவர்களால் திராவிட நாட்டின் வானம்பாடி கவிஞர் முடியரசன் என்றும். முத்தமிறிஞர் கலைஞர் அவர்களால் திராவிட இயக்கத்தின் முன்னோடிக் கவிஞர் என்றும், இன்று திராவிட இயக்கம் நிமிர்ந்து நின்று கோலோச்சுகிறது என்றால், அன்று முடியரசனார் ஆற்றிய இலக்கியப் பணியும் காரணம் என்றும், புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களால் வணங்கா முடியரசர் – வளையா முடியரசர் என போற்றப்பட்ட வீறு கவியரசர் முடியரசன் அவர்களுக்கு பெருமை சேர்க்கின்ற வகையில், சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் ரூ.50 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்படும் திருவுருவச் சிலைக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அடிக்கல் நாட்டினார்.
வாளுக்கு வேலி அம்பலம்
மாமன்னர் மருது பாண்டியர்களின் உற்ற நண்பராக விளங்கிய சுதந்திரப் போராட்ட வீரர் வாளுக்கு வேலி அம்பலம் அவர்கள் தென் தமிழ்நாட்டில் கி.பி.18ஆம் நூற்றாண்டில் வெள்ளையர்களின் எதேச்சாதிகாரத்தை எதிர்த்துப் போரிட்டவர். அவர் பாகனேரி என்ற சிற்றூரின் தலைவராவார். அன்றைய காலகட்டத்தில் பாகனேரி என்பது 20க்கும் மேற்பட்ட சிற்றூர்களைக் கொண்ட ஒரு பகுதியாகும். தமிழர்களின் தொன்மையான போர்க் கலைகளில் குறிப்பாக ஈட்டி எறிதல் மற்றும் வளரி உள்ளிட்ட பல போர்க் கருவிகளைத் திறம்படக் கையாள்வதிலும் வல்லவர்.
மருதுபாண்டியர்களின் உற்ற நண்பராகவும் விளங்கியவர். வீரமங்கை வேலுநாச்சியாருடன் இணைந்து வெள்ளையர்களுக்கு எதிரான பல்வேறு போர்களைத் திறம்பட எதிர்கொண்டவர் என்று சிவகங்கை சரித்திர அம்மானையில் பக்கம் 151-இல் குறிப்பிடப்படுகிறது. நேரிடையாக இவரை வெல்ல முடியாத ஆங்கிலேயர்கள் சூழ்ச்சி முறையில் கத்தப்பட்டு என்கின்ற ஊரில் 1801ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் 21–ஆம் நாள் கொன்றனர். அந்தச் சுதந்திரப் போராட்ட வீரர் வாளுக்குவேலி அம்பலத்தின் நினைவைப் போற்றி அவருக்குப் பெருமை சேர்க்கின்ற வகையில், சிவகங்கை மாவட்டத்தில் அன்னாரின் வாரிசுகள் பெரும்பான்மையாக வசிக்கக்கூடிய நகரம்பட்டியில் ரூ.50 இலட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள திருவுருவச் சிலையினை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்தார்.
முன்னதாக பல்வேறு மக்கள் நலத்திட்ட பணிகளை தொடங்கி வைத்த முதல்வர் ஸ்டாலின், மக்கள் நலத்திட்டங்களையும் பயனர்களுக்கு வழங்கினார்.
விழாவில் சிறப்புரை ஆற்றிய முதலமைச்சர் ஸ்டாலின், சிவகங்கை சிறப்பினையும், திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகளையும் எடுத்துரைத்தார். அப்போது, வீரமும், விவேகமும் விளைந்த மண் சிவகங்கை. திமுக ஆட்சி அமைந்தாலே நலத்திட்ட உதவிகள் சிவகங்கையை தேடி வரும். உங்கள் ஒவ்வொரு குடும்பத்திலும் உறவாக நான் இருக்கிறேன். எல்லோருக்கும் எல்லாம் என்ற அடிப்படையில் திட்டங்களை நிறைவேற்றி வருகிறோம் என்றவர், சிவகங்கை மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டுள்ள அரசு திட்டங்கள் குறித்த எடுத்துரைத்தார்.
சிவகங்கை மாவட்டத்தில் ப ள்ளி கட்டடம், ஆரம்ப சுகாதார நிலையம், மதுரை- தொண்டி தேசிய நெடுஞ்சாலை, சிவகங்கை புதிய நகராட்சி கட்டிடம், 59 திருக்கோவிலில் ரூ.14 கோடி செலவில் கோவில் திருப்பணி, மாணவர்களுக்கு தங்கும் விடுதி, மருத்துவமனை விரிவாக்கம், நியோ ஐ.டி.பார்க், தியாகி ஜீவானந்தம் மணிமண்டபம், செட்டிநாடு வேளாண் கல்லூரி, சிவகங்கை மாவட்டத்தில் பல ஊர்களில் ரூ.616 கோடி செலவில் காவிரி கூட்டு குடிநீர் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது என்று பட்டியலிட்டார்.
மேலும், சிவகங்கை ஆட்சியர் அலுவலகத்திற்கு புதியதாக ரூ.89 கோடியில் கட்டடம் கட்டப்படும் என அறிவித்ததுடன், காரைக்குடி மாநகராட்சிக்கு ரூ.30 கோடியில் புதிய அலுவலகம் கட்டித்தரப்படும் என்றும், சிங்கம்புணரி, திண்டுக்கல், காரைக்குடி செல்லும் வாகனங்கள் திருப்பத்தூருக்குள் வராமல் செல்ல ரூ.50 கோடியில் புதிய புறவழிச்சாலை அமைக்கப்படும் என்றும் அறிவிப்பு வெளியிட்டார்.
மேலும், இன்னொருவரின் அறிக்கையை காப்பியடித்து அறிக்கை கொடுக்கிறார். திண்ணையில் அமர்ந்து பேசுவது போல் வெட்டிக்கதை பேசுகிறார் எடப்பாடி பழனிசாமி என விமர்சித்தவர், எதிர்க்கட்சி தலைவர் போடும் கணக்குகள் அனைத்தும் தப்பு கணக்குகள் தான் என்றார்.
மகளிருக்கு ஸ்கூட்டர் வழங்கப்படும் என கூறிய அதிமுக அதனை நிறைவேற்றியதா? என கேள்வி எழுப்பியதுடன், 58 வயதுக்கு மேல் உள்ளோருக்கு இலவச பஸ் பாஸ், பொது இடத்தில் Wifi வசதி என வெற்று வாக்குறுதி அளித்தது அதிமுக தான் ஆனால், அதை நிறைவேற்றவில்லை என்றார்.
பதவிக்காக மட்டும் டெல்லிக்கு சென்றனர் அதிமுகவினர் என்று விமர்சித்த முதல்வர் ஸ்டாலின், 2013-ம் ஆண்டு முதல் தமிழகத்தை பற்றாக்குறை மாநிலமாக மாற்றியது எடப்பாடி பழனிசாமிதான். தவழ்ந்து தவழ்ந்து தமிழ்நாட்டை தரைமட்டத்திற்கு கொண்டு வந்த எடப்பாடி திமுக அரசை வீழ்த்த நினைக்கிறார் என்றார்.
தமிழ்நாட்டை திவாலாக்க வேண்டும் என்பது தான் எடப்பாடியின் நோக்கமா? அரசின் எந்த திட்டத்தை வீண் செலவு என கூறுகிறார்? * எங்களில் செயல்பாடுகளை நினைவில் கொண்டு திமுக ஆட்சி திட்டங்களுக்கு மக்கள் அளிக்கும் முதல் மதிப்பெண் போதும் என்றவர், 2021 தேர்தலுக்கு திமுக சார்பில் கொடுத்த 505 வாக்குகுறு திகளில் 389 வாக்குறுதிகள் நிறைவேற்றம். 116 வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டியுள்ளது என்றும், மத்திய அரசின் திட்டங்களுக்கும் மாநில அரசின் நிதியை செலவு செய்கிறோம் என்றும் கூறினார்.