கள்ளக்குறிச்சி:  கள்ளக்குறிச்சி அருகே மக்காசோளம் பயிருக்கு அடித்த குருணை மருந்தை சாப்பிட்ட 11 மயில்கள் உயிரிழந்தது. இது தொடர்பாக 2 பேரை வனத்துறையினர் கைது செய்துள்ளனர்.

இந்தியாவின் தேசிய பறவையான மயில்களை கொல்வது சட்டப்படி குற்றம். ஆனால், விளைநிலங்களில் உள்ள பயிர்களை நாசமாக்குவதால், மயில்கள் விஷம் வைத்து கொல்லப்படும் நிகழ்வுகளும் அரங்கேறி வருகின்றன. இந்த நிலையில்,  சங்கராபுரம் அருகே மக்காச்சோளம் பயிருக்கு அடித்த  குருணை மருந்தை உட்கொண்ட 11 மயில்கள் உயிரிழந்தது,  அங்குள்ள மல்லாபுரம் பாப்பாத்தி மூளை ஓடை பகுதியில் மர்மமான முறையில் 11- க்கும் மேற்பட்ட மயில்கள் திடீரென உயிரிழந்து இருந்தது தொடர்பாக அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் வனத்துறை அலுவலருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர், மயில்களை மீட்டு சம்பவ இடத்திலேயே உடற்கூறு ஆய்வு செய்தனர்.  அதில் குருணை மருந்து சாப்பிட்டதால் 11 மயில்களும் இறந்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அந்த பகுதியில் குருணை மருந்து அடித்த விவசாயகிள் இரண்டு பேரை வனத்துறையினர் கைது செய்து விசாரித்து  கைது செய்துள்ளனர்.

மக்காச்சோளம் பயிரை புழு பூச்சிகளில் இருந்து பாதுகாக்க  குருணை மருந்து வைத்ததாகவும், அதை சாப்பிட்ட மயில்கள் இறந்துள்ளதும் தெரிய வந்தது. இதையடுத்து,  அதே கிராமத்தைச் சேர்ந்த தர்மலிங்கம், சுப்பிரமணி ஆகிய இருவரை கைது செய்த வனத்துறையினர், அவர்களை திருக்கோவிலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

குருணை மருந்து என்பது பயிர்களுக்கு பயன் படுத்தப்படும் ஒருவகை பூச்சிக்கொல்லி விஷம் என்பது குறிப்பிடத்தக்கது.  விவசாய பயிர்களை நாசமாக்கும் பூச்சிகளை  கட்டுப்படுத்த குருணை மருந்தை விவசாயிகள் பயன்படுத்துகின்றனர். இதில், எதிர்பாராதவிதமாக மயில்கள் பயிருடன் சேர்ந்த மருந்தையும் உட்கொள்வதால் உயிரிழக்கும் கொடுமை நிகழ்ந்து விடுகிறது.