சென்னை:

துணைமுதல்வர் ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்ட 11 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. இதற்கிடையில், முதல்வர் பழனிச்சாமி எழுதிய கடிதம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த கடிதம் இன்றைய விசாரணையின்போது திருப்புமுனையை ஏற்படுத்துமா என்பது பரவலாக விவாதிக்கப்பட்டு வருகிறது.

பிஎஸ் உள்பட 11 பேரை தகுதிநீக்கம் செய்ய உத்தரவிடக்கோரி உச்சநீதி மன்றத்தில் திமுக தொடர்ந்த வழக்கில், சபாநாயகர் முடிவெடுக்க கூறி, பிப்ரவரி மாதம் 14ந்தேதி வழக்கை முடித்து வைத்தது உச்சநீதிமன்றம்.

ஆனால், உச்சநீதி மன்றம் தீர்ப்பு வழங்கி  4 மாதங்கள் ஆன நிலையில், இதுவரை சபாநாயகர் எந்தவொரு முடிவும் எடுக்கவில்லை என்ற கூறி, திமுக தரப்பில் மீண்டும் உச்சநீதிமன்றதை நாடப்பட்டது.

அதைத்தொடர்ந்து,  ஓ.பன்னீர்செல்வம் உட்பட 11 எம்எல்ஏ-க்களை தகுதி நீக்க செய்ய கோரிய வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.

இதற்கிடையில், இது தொடர்பாக சபாநாயகரிடம் முதலமைச்சர் பழனிசாமி அளித்துள்ள விளக்கம் திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளது.

எடப்பாடி அளித்துள்ள கடிதத்தில், நம்பிக்கை வாக்கெடுப்பின் போது 11 எம்எல்ஏ-க்கள் தவிர்த்து, எஞ்சிய 122 பேருக்கு மட்டுமே கொறடா உத்தரவு அனுப்பப்பட்டதாகவும், அதனால் 11 பேர் மீது நடவடிக்கைக் வேண்டிய அவசியமில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

இதை மேற்கொள்காட்டி, புகார் அளித்த 6 பேரும் பதிலளிக்க கூறி, சட்டப்பேரவை செயலர் கடந்த 10-ம் தேதி கடிதம் எழுதியுள்ளார்.

11 எம்எல்ஏ-க்களுக்கு எதிராக திமுக தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வரவுள்ள நிலையில், பேரவை சபாநாயகருக்கு முலமைச்சர் பழனிசாமி எழுதியுள்ள கடிதம் திருப்பம் ஏற்படுத்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.