சென்னை:

மிழகத்தில் விநியோகம் செய்யப்பட்ட 1000 ரூபாயுடன் இலவச ரேசன் பொருட்களை முதல் நாளிலேயே 11.63 சதவிகிதம் பேர் பெற்று கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா நிவாரணமாக 1000 ரூபாயுடன் இலவச ரேசன் பொருட்கள் விநியோகம் நேற்று தொடங்கியது. ரேசன் கடைகளில் மக்கள் கூட்டமாக கூடுவதை தவிர்க்க டோக்கன் வழங்கப்பட்டு பொருட்கள் விநியோகம் செய்யப்படுகின்றன.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்குதல் அதிகரித்து வரும் நிலையில், பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் அனைவரும் வீடுகளில் முடங்கியுள்ள நிலையில், அவர்களுக்கு நிவாரண உதவி வழங்கும் வகையில் அனைத்து அரிசி ரேஷன் அட்டைகளுக்கும் ரூ.1,000 நிவாரண உதவியாக வழங்கப்படும் என்று சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.மேலும் ஏப்ரல் மாதத்திற்கான அரிசி, சர்க்கரை, துவரம் பருப்பு, கோதுமை, சமையல் எண்ணெய் ஆகியவையும் இலவசமாக வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்திருந்தார்.

ஒரு கோடியே 88 லட்சத்து 29 ஆயிரத்து 73 பேர் உள்ளனர். இவர்களுக்கு தலா ரூ. 1,000 நிவாரண உதவி வழங்குவதற்காக ரூ.1,882 கோடியே 90 லட்சத்து 73 ஆயிரம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த நிவாரணம் வழங்கும் திட்டம் நேற்று தொடங்கியது. அனைத்து ரேஷன் கடைகளிலும் நிவாரணத் தொகை 1000 ரூபாயுடன், ரேசன் பொருட்களும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றன. ரேசன் கடைகளில் கூட்டம் கூடுவதை தவிர்க்கும் வகையில் தெரு வாரியாக பிரிக்கப்பட்டு, டோக்கன் வழங்கப்பட்டு இந்த பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. கடைகளில் பொதுமக்கள் சமூக இடைவெளியை பின்பற்றுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கொரோனா நோய் பரவும் அச்சம் இருப்பதால், கூட்ட நெரிசலை தவிர்க்க வேண்டும் என்ற கண்டிப்பான உத்தரவு அரசு தரப்பில் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இருந்தாலும் இந்த உத்தரவை மதிக்காமல் பொதுமக்கள் ரேசன் கடைகளில் கூட்டம் கூட்டமாக குவிந்து நிவாரண பொருட்களை வாங்கி சென்றுள்ளனர். இவர்களை கட்டுபடுத்த முடியாமல் போலீசார் திணறியதை கண்கூடாக பார்க்க முடிந்தது.