ஈரோடு: 10, 12 ஆம்பொதுத்தேர்வு சட்டமன்ற தேர்தல் அறிவித்த பிறகுதான், தேர்வு தேதிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்ட உள்ளதாக கூறியுள்ள அமைச்சர் செங்கோட்டையன், நீட் தேர்வுக்கு பயிற்சி அளிக்கக்கூடிய ஆசிரியர்கள் தமிழக அரசு பள்ளிகளில் இல்லை என்று கூறியுள்ளார். இது ஆசிரியர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் செய்தியாளா்களிடம் பேசிய தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகே 10 மற்றும் +2 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்படும், 12-ம் வகுப்பு செய்முறை தேர்வு குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் 10 மாணவர்களுக்கும் குறைவாக மாணவர்கள் படித்து வரும் பள்ளிகளை நூலகமாக மற்றுவது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை என்று தெரிவித்தவர், மாணவர் சேர்க்கையை அதிகரிக்க ஆசிரியர்களுக்கு உத்தரவிட்டு இருப்பதாகவும் கூறினார்.
மேலும், மத்திய அரசு நடத்தும் நீட் மற்றம் ஜேஇஇ போன்ற நுழைவுத் தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கும் வகையில் நமது அரசுப் பள்ளிகளில் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் இல்லை என்று கூறியவர், அதனால்தான், தனியார் மூலம் ஆன்லைனில் மட்டுமே பயிற்சி அளிக்கப்படுகிறது, இந்த ஆண்டு தமிழக அரசு வழங்கும் இலவச நீட் தேர்வு பயிற்சி பெற சுமார் 12 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்திருந்த நிலையில், அவர்களில் 5800 பேர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டு இலவச பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது என்றார்.
தமிழக அரசு பள்ளிகளில் எவ்வளவோ திறமையான ஆசிரியர்கள் இருந்தும், கல்வித்துறை அமைச்சர், திறமையான ஆசிரியர்களே இல்லை என்று கூறியிருப்பது ஆசிரியர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசுப் பள்ளிகளில் எந்தவித வசதி வாய்ப்புகளையும் செய்து தராத அரசு, ஆசிரியர்களை குறை சொல்வது ஏன் என்று எதிர்ப்பு தெரிவித்துள்ள ஆசிரியர்கள், பல அரசு பள்ளிகள் 10ம், 12ம் வகுப்புகளில் நல்ல மதிப்பெண் பெற்று தேர்ச்சிபெற்று வருகிறார்களே, இது அமைச்சருக்கு தெரியாதா, ஊழல் செய்வதற்காகவே, நீட் பயிற்சி போனற்வைகள் தனியாரிடம் கொடுக்கப்பட்டுள்ளது என்று குற்றம் சாட்டியுள்ளனர்.