சென்னை மாநகரின் வரலாற்று அடையாளங்களில் மிக முக்கியமானது வெண்மை நிறம் கொண்ட ரிப்பன் பில்டிங். சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு அருகே உள்ள இந்த கட்டிடம் தான் மாநகராட்சி அலுவலகமாக செயல்பட்டு வருகிறது.

ரிப்பன் பில்டிங் என்றாலே அதன் வெண்மை நிறத்தை தாண்டி, உடனே நினைவுக்கு வருவது அதன் உச்சியில் உள்ள மிகப் பிரம்மாண்டமான கடிகாரம்.

1919 ஆம் ஆண்டு லண்டனில் தயாரிக்கப்பட்டு சென்னையில் நிர்மாணிக்கப்பட்ட ரிப்பன் பில்டிங் கடிகாரத்திற்கு தற்போது வயது 109.
இந்த கடிகாரத்தின் தயாரிப்பு, உபகரணங்களின் தன்மை உள்ளிட்டவை தொடர்பான ஆவணங்கள் காணாமல் போய்விட்டன. இதனால் இந்த கடிகாரத்திற்கு சிக்கல் ஏற்படும் போதெல்லாம் உள்ளூர் தொழில்நுட்பத்தை வைத்தே சரி செய்யப்படுகின்றன.

இப்படித்தான் புராதான சின்னங்களை மறுசீரமைக்கும் ஜவஹர்லால் நேரு நகர்ப்புற வளர்ச்சித் திட்டத்தின் கீழ் இந்த கடிகாரத்தின் சில பகுதிகள் கடந்த 2013-ஆம் ஆண்டு பழுது பார்க்கப்பட்டன.

ரிப்பன் மாளிகை கட்டிடம் அண்மையில் மீண்டும் மெருகேற்றப்பட்ட நிலையில், பழுது காரணமாக கடிகாரத்தை நிறுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.

இன்று முதல் 25 நாட்களுக்கு ரிப்பன் பில்டிங் கடிகாரம் இயங்காது என்கின்றனர் அதிகாரிகள்.

கடிகாரத்தை பழுதுபார்க்க தேவையான உபகரணங்களை வடிவமைக்க அம்பத்தூர் லேத் பட்டறைகளில் ஆர்டர்கள் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் அவை கிடைத்தவுடன் பழுது பார்க்கப்பட்டு ஜூலை 26ஆம் தேதி முதல் கடிகாரம் மீண்டும் கம்பீரமாக ஓட ஆரம்பிக்கும் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

– பி.எல். வெங்கட்