டெல்லி: கடந்த ஓராண்டை கடந்தும் உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ், இந்தியாவில் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது.  கடந்த 24 மணி நேரத்தில் 1,03,558 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உலக நாடுகளில் முதலிடத்தை பிடித்துள்ளது. இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியாவில் கடந்த ஆண்டு  (2020) இறுதியில் தொற்று பரவல் குறைந்ததால், தளர்வுகளும் தாராளமாக்கப்பட்டது.  இதனால் மக்களின் இயல்புவாழ்க்கை திரும்பியது. இந்த நிலையில்,  இந்த ஆண்டு (2021)  பிப்ரவரி முதல் மீண்டும் தொற்று பரவல் அதிகரிக்கத் தொடங்கியது.இது கொரோனா பரவலின் 2வது அலை என மருத்துவ நிபுணர்கள் எச்சரித்து வருகின்றனர்,

தொடர்ந்து அதிகரித்து வரும் தொற்று  மார்ச் முதல் ஜெட் வேகத்தில் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, நாள் ஒன்றுக்கு 50,000-க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், இன்று 1,03,558 பேருக்கு, அதாவது கடந்த 24 மணி நேரத்தில் புதியதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,25,89,067 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் கடந்த 24 மணி நேரத்தில் 52,847 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு, டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள நிலையில், குணமடைந்தோர் எண்ணிக்கை 1,16,82,136 ஆக உயர்ந்துள்ளது.

தற்போதைய நிலையில் கொரோனா பாதிக்கப்பட்டு  7,41,830 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், கடந்த 24 மணிநேரத்தில் 478  பேர் உயிரிழந்த நிலையில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,65,101  ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் சூழலில், தடுப்பூசி எடுத்துக்கொண்டோரின் எண்ணிக்கை 7,91,05,163-ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில், கொரோனா ஒருநாள் பாதிப்பில் பிரேசில், அமெரிக்காவை பின்னுக்கு தள்ளி இந்தியா முதலிடம் பிடித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் அமெரிக்காவில் சுமார் 36,983  பேரும், பிரேசிலில் 31,793  பேரும், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து, இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியையும், மக்களிடையே அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.