தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு லாக்டவுன் போடப்படுமா? என்ன சொல்கிறார் ராதாகிருஷ்ணன்…

Must read

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் உச்சமடைந்து வருவதால்,  சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு லாக்டவுன் போடப்படும் என்ற தகவல் வெளியாகி வருகிறது. இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த தமிழக சுகாதாரத்துறை செயலாளர்  ராதாகிருஷ்ணன் வதந்திகள் பரவுகின்றன. அதை யாரும் நம்ப வேண்டாம் என தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 3,581 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 8 லட்சத்து 99 ஆயிரத்து 807 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 8 லட்சத்து 65 ஆயிரத்து 071 ஆக உயர்ந்துள்ளது. தற்போதைய நிலையில், 21,958 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று ஒரே நாளில் 14 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். இதனால் வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 12 ஆயிரத்து 778 ஆக அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்,  வாக்களிக்கும் போது வாக்காளர்கள் அனைவரும்  கொரோனா தடுப்பு நடவடிக்கையை பின்பற்ற அனைத்து வகையான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.  அனைவரும் கட்டாயம் மாஸ்க் அணிந்து கொண்டு தான் மக்கள் வாக்களிக்க செல்ல வேண்டும்.  மாஸ்க் இல்லாமல் தயவு செய்து செல்ல வேண்டாம். அங்கு சமூக இடைவெளியை கடைபிடித்து வாக்களிக்க வேண்டும்.

தமிழகத்தில் படிப்படியாக கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. 3,500க்கு மேல் பதிவாகியுள்ளது. கொரோனா பரவல் காரணமாக சில பகுதிகளில், கொரோனா கட்டுப்பபாடு பகுதிகளாக அறிவிக்கப்பட்டு உள்ளன. அந்த  கட்டுப்பாடு பகுதிகளில் வீடு வீடாக சென்று கொரோனா டெஸ்ட் எடுக்கும் பணி தேர்தல் முடிவடைந்த பிறகு, அதாவது 7ம் தேதிக்கு பிறகு முழு வீச்சில் தொடங்கும். அத்துடன்  காய்ச்சல் முகாம்களும் முழுவீச்சில் நடைபெறும் என அறிவித்தார்.

மேலும், தமிழகத்திவ்ல கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்பவர்களின் எண்ணிக்கை குறைந்திருக்கிறது. தேர்தலுக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லை. 45 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். தடுப்பூசி போட்ட பிறகும் கொரோனா வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. ஆனால், அது அந்த அளவுக்கு வீரியத்துடன் இருக்காது என மருத்துவர்கள் கூறுகிறார்கள். தமிழகத்தில் இதுவரை 32 லட்சம் பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டிருக்கிறார்கள். யாருக்கும் இதுவரை பாதிப்பு இல்லை என்றும் கூறினார்.

கொரோனா வதந்திகளை யாரும் பரப்ப வேண்டாம் என வேண்டுகோள் விடுத்தவர். அதுகுறித்து வரும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம்.  கொரோனா அதிகரிப்பு காரணமாக, 6ம் தேதிக்கு பிறகு லாக் டவுன் போடப்படும் என வதந்திகள் பரவுகின்றன. அது உண்மை அல்ல என்று கூறியவர்,  பொதுமக்கள்  கவனக்குறைவாக இருந்ததால் தான் பாதிப்பு மீண்டும் அதிகரித்துள்ளது. கொரோனா பரவலை தடுக்க  மக்கள் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

More articles

Latest article