குஜராத் மாநிலம் மோர்பி பகுதியில் உள்ள மொச்சு ஆற்றின் மீது இருந்த கயிற்றுப் பாலம் அறுந்து விழுந்ததில் 400 க்கும் அதிகமானோர் ஆற்றில் மூழ்கியதாக கூறப்படுகிறது.

பாலம் அறுந்து விழும்போது 500 க்கும் மேற்பட்டோர் அந்த பாலத்தின் மீது இருந்ததாகவும் பாலம் இரண்டாக உடைந்து ஆற்றில் விழுந்ததாகவும் கூறப்படுகிறது.

இதில் 400 க்கும் அதிகமானோர் நீரில் மூழ்கியதால் பலர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

இதுவரை 10 குழந்தைகள் உட்பட 60 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 100ஐ தாண்டும் என்று கூறப்படுகிறது.

குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் கேவாடியா எனும் இடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டிருந்த போது இந்த நிகழ்வு குறித்து அவரிடம் தெரிவிக்கப்பட்டது.

இதனை அடுத்து அவர் காந்தி நகர் விரைந்த நிலையில் பிரதமர் மோடி தலையிட்டு மீட்பு பணிகளை துரிதப்படுத்தியுள்ளார்.

மாநில முதல்வர் மீட்பு மற்றும் அடுத்த கட்ட நடவடிக்கையில் சுணக்கம் காட்டியதாலேயே உயிரிழப்பு அதிகரித்துள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இந்த நிலையில், இறந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ. 2 லட்சம் வழங்கப்படும் என்றும் காயமடைந்தவர்களுக்கு ரூ. 50000 வழங்கப்படும் என்றும் பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

தீபாவளி பண்டிகை முடிந்து கடந்த சில நாட்களாகவே இந்த பாலத்தின் மீது செல்வோர் எண்ணிக்கை அதிகரித்துவந்த நிலையில் அதிகாரிகளின் கவனக்குறைவே இந்த விபத்துக்கு காரணம் என்று கூறப்படுகிறது.