சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், அடுத்த 2 மாதங்களில் டெங்கு பாதிப்பு அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகவும், வாரம் 1000 மருத்துவ முகாம்கள் வீதம் மொத்தமாக 10ஆயிரம் பருவகால நோய்கள் தடுப்பு சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட உள்ளது என்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்து உள்ளார்.
சென்னையில் உருவாக்கப்பட்டுள்ள ஹெல்த் வாக் சாலையை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சுகாதாரத்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி உள்பட அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பேசியதாவது:-
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 20ஆம் தேதி துவங்கி, 4,5 நாட்களை கடந்து தற்போது பெரும்பாலான இடங்களில் மழை பெய்து வருகிறது. ஒவ்வொரு பருவமழை காலத்தின் போதும், மலேரியா, டெங்கு, சேத்துப்புண், சளி, தொண்டை வலி உள்ளிட்ட மழைக்கால நோய்கள் வருவதும் தவிர்க்க முடியாத ஒன்று.
குறிப்பாக மழைக்கால நோய்களை பரப்பும் நன்னீரில் வளரும் ஏடிஎஸ் கொசு உற்பத்தியை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் டெங்கு பெருமளவில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த 10 மாதங்களில் 5600 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
வரும் நவம்பர், டிசம்பர் மாதங்களில் அதிக பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. ஆயிரம், இரண்டாயிம் டெங்கு பாதிப்புகள் வரலாம். தற்போதைய நிலவரப்படி, 490 பேர் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த 2012ஆம் ஆண்டு தமிழகத்தில் டெங்கு பாதிப்பு 13 ஆயிரமாக இருந்தது. 2013ஆம் ஆண்டு டெங்கு பாதிப்பு 23 ஆயிரமாக இருந்தது. அதே போல, 2012இல் டெங்கு பாதிப்பால், 64 பேர் உயிரிழந்தனர். 2013இல் 65 இறப்புகள் பதிவாகியுள்ளன. தமிழகத்தில் வரும் 2 ,மாதங்களில் டெங்கு இறப்பு கூடாது என நினைக்கிறோம். தமிழகம் முழுவதும் வரும் 29ஆம் தேதி முதல் அக்டோபர், நவம்பர், டிசம்பர் என மொத்தமுள்ள 10 ஞாயிற்று கிழமைகளில் வாரம் 1000 மருத்துவ முகாம்கள் வீதம் மொத்தமாக 10,000 பருவகால நோய்கள் தடுப்பு சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட உள்ளது என்றார்.
மேலும், நவம்பர் 4ந்தேதி தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களில் 8 கிலோ மீட்ட கொண்ட ஹெல்த் வாக் சாலை தொடங்கப்படவுள்ளது. சென்னை பெசன்ட் நகரில் ஹெல்த் வாக் சாலை திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். மாதந்தோறும் முதல் ஞாயிற்றுக்கிழமை சுகாதாரத் துறையின் சார்பில் ஹெல்த் வாக் நடைபெறும் இடங்களில் மருத்துவ முகாமும் நடைபெற உள்ளது.
நடைபயிற்சி மேற்கொள்பவர்கள் வசதிக்காக காலை 5 முதல் 8 மணி வரை பெசன் நகர் அவன்யூ பகுதி சாலைகளில கனரக வாகனங்கள் வந்து செல்ல அனுமதி இல்லை.
கொரோனா காலத்திற்குப் பிறகு சமீபகாலமாக இளம் வயதினர் உள்பட பலருக்கு மாரடைப்பு அதிகரித்து வருகிறது. மாரடைப்பால் ஏற்படும் உயிரிழப்பு அதிகரித்துள்ள நிலையில் நடைபயிற்சியும், உடற்பயிற்சியும் அவசியம் என்றார்.
அதைத்தொடர்ந்து டெங்கு தொடர்பான கேள்விக்கு பதில் கூறியவர், கடந்த பத்து மாதங்களில் 5,600 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 5 பேர் இறந்துள்ளனர். வரும் நவம்பர், டிசம்பர் மாதங்களில் டெங்கு பாதிப்பு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்றார்.
மருத்துவ மாணவர் சேர்க்கை தொடர்பான கேள்விக்கு, அனைத்திந்திய ஒதுக்கீட்டின் கீழ் எம்பிபிஎஸ்., பிடிஎஸ் படிப்புகளுக்கான காலியிடங்கள் முழுமையாக நிரப்பப்படாமல் உள்ளன. காலியிடங்களை மாநில அரசே நிரப்பிக்கொள்ள அனுமதிக்க வேண்டுமென மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டுள்ளது. சட்ட வல்லுநர்களுடன் பேசி சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்பட இருப்பதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
முன்னதாக, தமிழகத்தில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சையளிக்க சிறப்பு பிரிவுகளையும், படுக்கை வசதிகளையும் அமைக்குமாறு பொது சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.
இதுதொடா்பாக மாவட்ட சுகாதார அலுவலா்களுக்கு பொது சுகாதாரத் துறை இயக்குநா் டாக்டா் செல்வவிநாயகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், மாநிலம் முழுவதும் பரவலாக மழைப் பொழிவு இருந்து வரும் நிலையில், ஏடிஸ் வகை கொசுக்களின் உற்பத்தியும், அதனால் பரவும் டெங்கு காய்ச்சலின் தாக்கமும் அதிகரித்து வருகிறது. நிகழாண்டில் இந்தியா மட்டுமல்லாது பல்வேறு நாடுகளிலும் டெங்கு காய்ச்சல் தீவிரமடைந்துள்ளது. எல்-நினோ எனப்படும் கடல் வளிமண்டல சுழற்சி மாற்றங்கள் காரணமாக டெங்கு உள்ளிட்ட தொற்றுகள் அதிகரிக்கக் கூடும் உலக சுகாதார அமைப்பும் எச்சரித்துள்ளது. இத்தகைய சூழ்நிலையில், தமிழகத்தில் செப்டம்பா் முதல் நவம்பா் மாதம் வரை கொசுக்களால் தீவிரமாக பரவ வாய்ப்புள்ள நோய்களைத் தடுக்கும் பொருட்டு பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டியுள்ளது. அதன்படி, மாநிலம் முழுவதும் மருத்துவக் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும். குறிப்பாக வீடுகள்தோறும் மருத்துவக் கண்காணிப்பை முன்னெடுக்க வேண்டும்.
கொசு ஒழிப்பு நடவடிக்கைகளை நகா்ப்புறங்களிலும், கிராமப்புறங்களிலும் விரிவுபடுத்துதல் அவசியம். எத்தகைய சூழலையும் எதிா்கொண்டு சிகிச்சையளிக்கும் வகையில் மருத்துவமனைகளில் டெங்கு வாா்டுகளையும், படுக்கைகளையும் அமைத்து போதிய மருத்துவ வசதிகளை தயாா் நிலையில் வைத்திருக்க வேண்டும். ரத்த வங்கிகளையும் தயாா் நிலையில் வைத்திருப்பதுடன் போதிய அலகு ரத்தத்தை இருப்பில் வைத்திருத்தல் முக்கியம். அவசர கால சூழல்களை சமாளிக்கும் வகையில் விரைவு உதவிக் குழுக்கள் அமைக்க வேண்டும். இதுதொடா்பாக அறிவுறுத்தல்களை சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு வழங்கி அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பது அவசியம். அந்த விவரங்களை பொது சுகாதாரத் துறைக்கு சமா்ப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நவம்பர்-4 அன்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் 38 மாவட்டங்களிலும் தொடங்கப்படவிருக்கின்ற "நடப்போம்… நலம் பெறுவோம்" HEALTH WALK 8 KM நடைபாதையில் மேற்கொள்ளப்படவுள்ள பணிகள் குறித்த ஆய்வும் ஆலோசனைகளும் . @mkstalin #Masubramanian #TNHealthminister #Healthwalk… pic.twitter.com/TjU1iVFNgB
— Subramanian.Ma (@Subramanian_ma) October 25, 2023