திருவண்ணாமலை: நாளை மகா தீபத்தை யொட்டி., மலை ஏறுவதற்கு 2500 பேருக்கு மட்டுமே அடையாள அட்டையுடன் அனுமதி வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ள நிலையில், மலையேறு நபர்களுக்கு சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புரையின்படி முக்கிய 10 கட்டுப்பாடுகளை மாவட்ட ஆட்சியர் முருகேஷ் விதித்து உத்தரவிட்டுள்ளார்.
கார்த்திகை தீபத்திருவிழா அக்னிஸ்தலமான திருவண்ணாமலையில், நவம்பர் 27ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. 10 நாட்கள் நடைபெறும் விழாவின் சிறப்பு நிகழ்வாகாக நாளை (டிசம்பர் 6ந்தேதி) 2668 அடி உயரமுள்ள மலை மீது மகாதீபம் ஏற்றப்படும். இதற்கான கொப்பரை, நெய், காடா திரி போன்றவை இன்று சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, மலையேற்றும் பணி தொடங்கியது.
மகாதீபத்தை யொட்டி, நாளை அதிகாலை 4 மணிக்கு அண்ணாமலையார் கோயிலில் பரணி தீபமும், மாலை 6 மணிக்கு அண்ணாமலை உச்சியில் மகாதீபமும் ஏற்றப்படும். மகா தீபத்தை பல லட்சக்கணக்கானோர் காண திருவண்ணாமலையில் குவிந்த வண்ணம் உள்ளனர். இந்த நிலையில், மலைமீது ஏறி மகா தீபத்தை தரிசனம் செய்ய இந்த ஆண்டு 2500 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டு உள்ளது. அதன் விவரம் வருமாறு: ?
- தீபத்திருநாளான 06.12.2022 அன்று 2500 பக்தர்கள் மட்டும் அண்ணாமலையார் மலை மீது ஏற பின்வரும் நிபந்தனைகளுக்குட்பட்டு அனுமதி அளிக்கப்படுகிறது.
- திருக்கார்த்திகை தீபத்திருவிழா நாளான 06.12.2022 அன்று காலை 06.00 மணி முதலில் வரும் 2500 பக்தர்களுக்கு மட்டுமே அண்ணாமலையார் மலை மீது ஏற அனுமதி வழங்கப்படும்.
- 06.12.2022 அன்று காலை 06.00 மணிக்கு திருவண்ணாமலை நகரம், செங்கம் சாலை, கலைஞர் கருணாநிதி அரசுக் கலை கல்லூரி வளாகத்தில் சிறப்பு மையம் திறக்கப்பட்டு 2500 பக்தர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய அனுமதி சீட்டு வழங்கப்படும்.
- இந்த அனுமதி சீட்டு முதலில் வரும் 2500 பக்தர்களுக்கு முன்னுரிமை (First Come First Serve Basis) என்ற அடிப்படையில் வரிசை கிரமமாக (Queue System) அனுமதி சீட்டு மேற்குறிப்பிட்ட சிறப்பு மையத்தில் வழங்கப்படும்.
- மலை ஏற அனுமதி கோரும் பக்தர்கள் தங்களது ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை மற்றும் பிற இதர அடையாள ஆவணங்களில் ஏதேனும் ஒன்றின் நகலினை சமர்ப்பித்து அனுமதி சீட்டு பெற்றுக் கொள்ளலாம்.
- பக்தர்கள் கோபுரம் அருகில் உள்ள வழியில் மட்டுமே மலை ஏற அனுமதிக்கப்படுவார்கள். மற்ற வழிகளில் மலை ஏற கண்டிப்பாக அனுமதி வழங்கப்பட மாட்டாது.
- 06.12.2022 அன்று பிற்பகல் 02.00 மணி வரை மட்டுமே பக்தர்கள் மலை ஏறுவதற்கு அனுமதிக்கப்படுவார்கள்.
- மலை ஏறும் பக்தர்கள் தண்ணீர் பாட்டில் மட்டுமே எடுத்து செல்ல அனுமதிக்கப்படுவர். மேலும் காலி தண்ணீர் பாட்டில்களை மலையிலிருந்து இறங்கி வரும் போது திரும்ப கொண்டு வர வேண்டும்.
- மலை ஏறும் பக்தர்கள் கற்பூரம், பட்டாசு மற்றும் எளிதில் தீப்பிடிக்க கூடிய பொருட்களை கொண்டு செல்ல அனுமதிக்கப்படமாட்டாது.
- மலை ஏறும் பக்தர்கள் கொண்டு செல்லும் நெய்யினை அனுமதிக்கப்பட்ட கொப்பரையில் மட்டுமே ஊற்ற வேண்டும், வேறு எந்த இடத்திலும் நெய்யினை ஊற்றவோ, நெய் தீபம் ஏற்றவோ கூடாது.
நாளை மகாதீபம்: திருவண்ணாமலையில் தீபகொப்பறையை மலையின் மீது ஏற்றும் பணி தொடங்கியது