10% ராஜ்யசபா எம்.பி.க்கள் 8வரை படித்தவர்களே… 54 எம்.பி.க்கள் கிரிமினல்கள்… அதிர்ச்சியூட்டும் ஆய்வு முடிவுகள்…

Must read

டெல்லி:
ராஜ்யசபா எம்.பி.க்களில் 10 சதவிகிதம் பேர்  8 முதல் 12ம் வகுப்பு வரை படித்தவர்கள் என்றும், 54 எம்.பி.க்கள் கிரிமினல்கள் என்றும்  அதிர்ச்சியூட்டும் ஆய்வு முடிவுகள் வெளியாகி உள்ளது.
பாராளுமன்ற ராஜ்யசபாவில் (மாநிலங்களவை)  உள்ள  229 எம்.பி.க்களில் 54 எம்.பி.க்கள் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன என்று இதுகுறித்து ஜனநாயகத்துக்கான சீர்திருத்த அமைப்பின் (Association for Democratic Reforms (ADR) )  தெரிவித்து உள்ளது.

233 எம்.பி.க்களை கொண்ட மாநிலங்களவைக்கு, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள எம்எல்ஏக்களின் வாயிலாக எம்.பி.க்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு வருகிறார்கள். அதன்படி, தற்போது 229 எம்எல்ஏக்கள் உள்ளனர். இவர்களில் 24 சதவிகிதம் பேர் மீது கிரிமினல் வழக்கு உள்ளதாக ஜனநாயகத்துக்கான சீர்திருத்த அமைப்பு தெரிவித்து உள்ளது.
இதுகுறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில்,  மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட 229 எம்.பி.க்களில் 24 சதவீதம் பேர் மீது அதாவது 54 எம்.பி.க்கள் மீது கிரிமினல் குற்றச்சாட்டு இருக்கிறது. இது அவர்கள் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது என்று தெரிவித்து உள்ளது.
இந்த 24 சதவிகிதி கிரிமினல்எம்.பி.க்களில் 12 சதவீதம் பேர் அல்லது 28 எம்.பி.க்கள் மீது தீவிரமான கிரிமினல் குற்றச்சாட்டு உள்ளதும் தெரிய வந்துள்ளது. இதில் அதிகபட்சமாக பாஜகவினரே உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பாரதீய ஜனதாவுக்கு ராஜ்யசபையில் 77 எம்.பி.க்கள் உள்ளனர். இதில் 14 எம்.பி.க்கள் மீது கிரிமினல் குற்றச்சாட்டு உள்ளது.
காங்கிரஸ் கட்சிக்கு மாநிலங்களவையில் 40 எம்.பிக்கள் உள்ளனர் .  அவர்களில்  8 எம்.பி.க்கள் மீது கிரிமினல் குற்றச்சாட்டு இருக்கிறது.
காங்கிரஸ் எம்.பி. கே.சி.வேணுகோபால் மீது பாலியல் பலாத்கார வழக்கும், 4 எம்.பி.க்கள் மீது கொலைமுயற்சி (ஐபிசி 307) வழக்குகளும் உள்ளன.
திரிணாமூல் காங்கிரஸ் கட்சியில் உள்ள 13 எம்.பி.க்களில் 2 பேர் மீதும்,
பிஜூ ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த 9 எம்.பி.க்களில் 3 பேர் மீதும்  கிரிமினல் வழக்கு உள்ளது.
ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 6 எம்.பி.க்களில் 3 பேர் மீதும்,
சமாஜ்வாடிக் கட்சியின் 8 எம்.பி.க்களில் 2 பேர் மீதும் கிரிமினல் வழக்குகளும், 4 எம்.பி.க்கள் மீது பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகள் உள்ளன.
அதிகபட்சமாக உத்தரப்பிரதேச மாநிலத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 30 எம்.பி.க்களில் 6 பேர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன.
மகாராஷ்டிர மாநிலத்திலிருந்து 19 எம்.பி.க்கள் தேர்வான நிலையில் அதில் 9 எம்.பி.க்கள் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன.
தமிழகத்திலிருந்து 18 எம்.பி.க்கள் தேர்வு செய்யப்பட்டனர். இதில் 4 எம்.பி.க்கள் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன.
மேற்கு வங்கத்திலிருந்து 13 எம்.பி.க்கள் தேர்வான நிலையில், அதில் 2 பேர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன.
பிகார் மாநிலத்திலிருந்து தேர்வான 15 எம்.பி.க்களில் 8 பேர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன.
இவ்வாறு தெரிவித்துள்ளது.
மேலும், மொத்தமுள்ள  229 ராஜ்யசபா  எம்.பி.க்களில் 89 சதவீதம் பேர் கோடீஸ்வரர்கள். 
அதாவது 203 எம்.பி.க்கள் தங்கள் பிரமாணப் பத்திரத்தில் தங்களுக்குக் குறைந்தபட்சம் ரூ.1 கோடிக்கும் அதிகமாகச் சொத்து இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.
பிகார் மாநிலத்தில் ஆளும் கட்சியான நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த எம்.பி.யான மகேந்திர பிரசாத்தின் சொத்து மதிப்பு ரூ.4 ஆயிரத்து 78 கோடியாகும்.
மிகக்குறைவாக மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த பாரதீய ஜனதா எம்.பி. மகாராஜா சனஜோபா லீஸ்ஹெம்பாவிடம் ரூ.5 லட்சம் மட்டுமே சொத்து இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எம்.பி.க்களில் 10 சதவீதம் அதாவது 24 எம்.பி.க்கள் கல்வித் தகுதி என்பது 8-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதில் 8-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர் ஒருவர், 10-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் 9 பேர், 12-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் 14 எம்.பிக்கள்.
ராஜ்யசபையில் 22 பெண் எம்.பி.க்கள் மட்டுமே உள்ளனர்.

More articles

Latest article