சென்னை: தமிழ்நாட்டில் முதல்வராக ஸ்டாலின் பதவி ஏற்று, புதிய அரசு அமைந்து, 5 மாதங்களே ஆன நிலயில், புதிதாக ரேசன் கார்டு (ஸ்மார்ட் கார்டு) கேட்டு,  10 லட்சத்திற்கும் மேற்பட்ட நபர்கள் விண்ணப்பித்துள்ளதாக உணவு வழங்கல் துறை  தெரிவித்து உள்ளது.

தமிழகத்தில், முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த மே மாதம் 7ம் தேதி தமிழ்நாடு முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றார். முன்னதாக, தேர்தல் பிரசாரத்தின்போது, திமுக தேர்தல் வாக்குறுதியாக பல்வேறு திட்டங்கள் இடம்பெற்று, ஸ்மார்ட் கார்டு வைத்திருப்பவர்களுக்கு பல்வேறு சலுகைகளும் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி,  மே மாதம் முதல் செப்டம்பர் மாதம் 26ம் தேதி வரை புதிதாக ஸ்மார்ட் கார்டு பெறுவதற்கு சுமார் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட நபர்கள் விண்ணப்பித்துள்ளதாகவும், இவர்களில் 93 சதவிகிதம் பேருக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இதுகுறித்து உணவு வழங்கல் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,  கடந்த மே மாதம் முதல்  செப்டம்பர் மாதம் 26ம் தேதி வரையிலும் தமிழகம் முழுவதும் 10,54,327 நபர்கள் புதிய ஸ்மார் கார்டு கோரி விண்ணப்பித்துள்ளனர். அதில், 7,28,703 விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதோடு, 2,61,844 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது.. 6,65,102 விண்ணப்பங்களுக்கு புதிய ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட்டுள்ளதாகவும், 63,601 ஸ்மார்ட் கார்டு அச்சிடும் பணி நடைப்பெற்று வருவதாகவும், 63,780 விண்ணப்பங்கள் வைப்பில் உள்ளதாகவும்,உணவு வழங்கல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மாவட்டத்தை பொருத்தவரை அதிகபட்சமாக, தென் சென்னையில் 67,051 நபர்கள் விண்ணப்பித்ததில், 36,815 விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு, 12,754 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது..மேலும், 27,829 நபர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட்டுள்ளதோடு,8986 நபர்களுக்கு ஸ்மார்ட் கார்டு அச்சிடும் பணி நடைப்பெற்று வருகிறது.

வட சென்னையில், 55962 நபர்கள் விண்ணப்பித்ததில், 28,624 விண்ணங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு, 10,741 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது…அதில், 24,234 நபர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட்டுள்ளதாகவும், 4,390 நபர்களுக்கு அச்சிடும் பணி நடைப்பெற்று வருகிறது

கடந்த 5 மாதங்களில், கோயம்புத்தூர் மாவட்டத்தில் 65,003 நபர்களும், சேலம் மாவட்டத்தில் 59,495 நபர்களும் விண்ணப்பித்துள்ளனர்.

விண்ணப்பித்துள்ளவர்களில் 93 சதவிகிதம் பேருக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.