திருவனந்தபுரம்:  கேரளாவின் பாரம்பரிய பண்டிகையான ஓணம் பண்டிகைக்காக கேரள அரசு பள்ளி கல்லூரிகளுக்கு 10 நாட்கள் விடுமுறை அறிவித்து உள்ளது. இது பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

ஆண்டுதோறும், ஆவணி மாதம் திருவோண நட்சத்திர நாளில் மகாபலி சக்கரவர்த்தி தன்னுடைய நாட்டையும்,  நாட்டு மக்களையும் பார்ப்பதற்காக வருவார் என்பது கேரள மக்களின்  ஐதீகம். இங்த நாளை வரவேற்கும் விதமாக காலம்காலமாக சாதி, மத பேதமின்றி கேரளாவில் ஓணம் பண்டிகை வெகுசிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. சுமார் 10நாட்கள் வரை இந்த பண்டிகையை கேரள மக்கள் கொண்டாடி மகிழ்கின்றனர்.  கேரள மாநிலத்தில் உள்ளது அனைத்தும் மலையாள மொழி பேசிடும் மக்களாலும் ஒன்றாக ஓணம் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஓணம் பண்டிகைக்காக வெளியூர், வெளிநாடுகளில் வசிக்கும் கேரள மாநிலத்தவர்களும் சொந்த ஊர் வந்து கொண்டாடி மகிழ்வர்.

இந்த நிலையில், கேரள அரசு, ஓணம் பண்டிகையை முன்னிட்டு பள்ளி, கல்லூரிகளுக்கு 10நாட்கள் விடுமுறை அறிவித்து உள்ளது. கேரளாவில் அடுத்த மாதம் (செப்டம்பர்) 2-ந்தேதி முதல் 11-ந்தேதி வரை  பள்ளி, கல்லூரிகளுக்கு  விடுமுறை அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதுதொடர்பாக  கேரள அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திகுறிப்பில், “ ஓணம் பண்டிகையை முன்னிட்டு கேரளாவில் பள்ளி, கல்லூரிகளுக்கு அடுத்த மாதம் (செப்டம்பர்) 2-ந்தேதி முதல் 11-ந்தேதி வரை விடுமுறை அளிக்கப்படுகிறது.  ஓணம் பண்டிகையையொட்டி நடைபெறும் தேர்வுகள் முன்னதாகவே நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி தேர்வுகள் வருகிற 24-ந்தேதி தொடங்கப்படுகிறது. முன்னதாக மழை காரணமாக விடுமுறை அறிவிக்கப்பட்ட நாட்களை ஈடு செய்யும் வகையில், இன்று (20.08.22) பள்ளி, கல்லூரிகள் இயங்கும்” என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.