ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் அடுத்த ஆண்டு இறுதியில் சட்டமன்ற தேர்தல் நடைபெற  உள்ள நிலையில், மாநிலத்தில் உள்ள அனைதுத குடும்ப தலைவிகளுக்கு ஸ்மார்ட்போன் மற்றும் 3 ஆண்டுகள் இணைய சேவை இலவசமாக வழங்கப்படும் என மாநிலத்தை ஆளும், அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில் அடுத்த ஆண்டு டிசம்பர் மாதம் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது.  அதை முன்னிட்டு அந்த மாநிலத்தில் தேர்தல் பணிகளில் இப்போதே கட்சிகள் மும்முரமாக செயல்பட்டு வருகின்றன. அங்கு ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள காங்கிரஸ் கட்சியும், ஆட்சியை பிடிக்க பாஜகவும் முயன்று வருகிறது. அதற்கான பணிகளை இப்போதே தொடங்கி உள்ளன.

இதற்கிடையில், நடப்பாண்டு பட்ஜெட் தாக்கலின்போது, முதல்வர் அசோக் கெலாட்,  குடும்ப தலைவிகளுக்கு ஸ்மார்ட் போன் இலவசம் என்று அறிவித்திருந்தார். அதற்கான டிஜிட்டல் சேவா யோஜனா திட்டத்தை  என்ற திட்டம் செயல்படுத்தப்படும் என கூறியிருந்தார்.  தற்போது, தேர்தலை  கருத்தில் கொண்டு அதை செயல்படுத்தம் நோக்கில்,  சிரஞ்சீவி சுகாதார காப்பீட்டு திட்டத்தில் பதிவு செய்திருக்கும் ஒரு கோடியே 35 லட்சம் குடும்பத் தலைவிகளுக்கு இலவச ஸ்மார்ட் போன் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

அதன்படி குடும்ப தலைவிகளுக்கு ஸ்மார்ட் போன் மற்றும் 3 ஆண்டுகளுக்கு இணையதள சேவை  இலவசமாக அளிக்கப்பட உள்ளது. இந்த திட்டத்திற்காக, திட்ட செலவு 12ஆயிரம் கோடி என மதிப்பிடப்பட்டு அதற்கான டெண்டர் விடப்பட்டிருக்கிறது.

கேரள முதல்வரின் அறிவிப்பை தொடர்ந்து, குடும்ப தலைவிகளுக்கு இணைய இணைப்பு அளிப்பதற்கு மூன்று தொலைதொடர்பு நிறுவனங்கள் முன் வந்திருக்கின்றன.  இதில் குறைந்த டெண்டர் வழங்கும் நிறுவனம் தேர்வு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. மாநிலத்தில் விரைவில்  பண்டிகை காலம் தொடங்க உள்ள நிலையில், அதற்கு முன்பாக முதற்கட்ட ஸ்மார்ட் ஃபோன்களை வழங்குவதற்கான பணிகளை ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் அரசு முடுக்கி விட்டுள்ளது.