சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், கொரோனா நோயாளிகளுக்காக 1லட்சத்து 92 ஆயிரம் படுக்கைகள் தயார் நிலையில் இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்து உள்ளார்.
தமிழ்நாட்டில் 2022ம் ஆண்டு ஜனவரி தொடக்கம் முதலே தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. இது கொரோனா தொற்றின் 3வது அலையாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தொற்று பரவலை தடுக்க தமிழகஅரசு கொரோனா கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தி உள்ளதுடன், தடுப்பூசி போடும் பணியையும் அதிகப்படுத்தி உள்ளது.
இந்த நிலையில், நேற்று (18ந்தேதி) மாநிலம் முழுவதும் புதிதாக மேலும் 23,888 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. இதில் வெளிநாடுகளில் இருந்து 2 பேர் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து 21 பேர் வந்துள்ளனர். இதுவரை 29,87,254 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் தற்போது, 1,61,171 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக சிகிச்சையில் உள்ளனர். இரு கடந்த இரு வாரத்தில் இரு மடங்காகி உள்ளது. பலர் மூச்சுத் திணறல் காரணமாக ஐசியுவில் அனுமதிக்கப்பட்டு உள்ளதால், ஆக்சிஜன் தேவையும் நான்கு மடங்கு அதிகாரித்து இருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளனர்.
இந்த நிலையில், சென்னை தாம்பரம் தேசிய சித்த மருத்துவமனையில் ஆய்வு செய்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், சித்த மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை மையத்தை திறந்து வைத்jர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது கொரோனா சிகிச்சை முறைக்கு சித்த மருத்துவம் பெரிதும் உதவுவதாக குறிப்பிட்டார்.
மேலும் மாநிலம் முழுவதும் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க ஒரு லட்சத்து 92 ஆயிரம் படுக்கைகள் தயாராக உள்ளதாகவும், போதுமான அளவு ஆக்சிஜன் கையிருப்பில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.