டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் 5ஆயிரத்தை கடந்துள்ளது. கடந்த 3 மாதங்களுக்கு பிறகு பாதிப்பு அதிகரித்துள்ளது அதிர்ச்சியை ஏற்பத்தி உள்ளது.

இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு கடந்த 3 மாதங்களில் இல்லாத அளவில் இன்று 5 ஆயிரத்தை தாண்டி உள்ளது. மகாராஷ்டிரா, கேரளாவில் பாதிப்பு உயர்ந்துள்ளது. மகாராஷ்டிராவில் புதிதாக 1,881 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. அதிகபட்சமாக மும்பையில் மட்டும் 1,242 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  நேற்று ஒரே நாளில் 83 சதவீதம் உயர்ந்துள்ளது. மும்பையில் கடந்த 5 மாதங்களுக்கு பிறகு தற்போது தினசரி பாதிப்பு மீண்டும் ஆயிரத்தை தாண்டி அதிர்ச்சி அளித்துள்ளது. மேலும் நவி மும்பை, புனே உள்ளிட்ட இடங்களிலும் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது.

கேரளாவில் புதிதாக 1,494 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அங்கு சுமார் 2 மாதங்களுக்கு பிறகு கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு தினசரி பாதிப்பு ஆயிரத்தை தாண்டியது. தொடர்ந்து 7 நாட்களாக ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.

இந்த நிலையில், மத்திய சுகாதாரத்துறை இன்று காலை 8மணி வரையிலான கடந்த 24மணிநேரத்தில் நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள கொரோனா பாதிப்பு குறித்து அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அதன்படி, கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக மேலும், 5,233 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. கடந்த மார்ச் 6-ந்தேதி பாதிப்பு 5,476 ஆக இருந்தது. அதன்பிறகு 3 மாதங்களுக்கு பிறகு தற்போது பாதிப்பு மீண்டும் 5 ஆயிரத்தை தாண்டி உள்ளது. இதன்மூலம், நாட்டில் இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 31 லட்சத்து 90 ஆயிரத்து 282 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று ஒரேநாளில் தொற்று பாதிப்பில் இருந்து 3,345 பேர் நேற்று நலம் பெற்று வீடு திரும்பினர். இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 26 லட்சத்து 36 ஆயிரத்து 710 ஆக உயர்ந்தது.

தற்போது நாடு முழுவதும்  28,857 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இது நேற்றை விட 1,881 அதிகம் ஆகும்.

நேற்று ஒரே நாளில் 7 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இதுவரை தொற்றுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 5,24,715 ஆக உயர்ந்துள்ளது.

நாடு முழுவதும் நேற்று 14,94,086டோஸ் தடுப்பூசிகளும், இதுவரை 194கோடியே 43லட்சம் டோஸ் தடுப்பூசிகளும்  செலுத்தப்பட்டுள்ளது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தகவல்படி, நேற்று 3,13,361 மாதிரிகளும், இதுவரை 85.35 கோடி மாதிரிகளும் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.